வாரணாசி: உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள சர்ச்சைக்குரிய ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறை வல்லுநர்கள் ஜூலை 26-ந் தேதி வரை அகழாய்வு நடத்துவதற்கு உச்சநீதிமன்றம் இன்று அதிரடியாக தடை விதித்தது.
உ.பி. வாரணாசி காசி விஸ்வநாதர் ஆலயத்தின் பகுதியிலேயே ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. காசி விஸ்வநாதர் ஆலயத்தின் ஒரு பகுதி இடிக்கப்பட்டுதான் மசூதி கட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக பல்வேறு வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.
வாரணாசி கோர்ட் உத்தரவு: இதில் ஒன்று காசி விஸ்வநாதர் கோவில் மீதுதான் மசூதி கட்டப்பட்டுள்ளதா? என்பதை தொல்லியல் துறை ஆய்வு செய்ய வேண்டும் என்பதும். வாரணாசி நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த வாரணாசி நீதிமன்றம், ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்தி ஆகஸ்ட் 4-ந் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.
தொல்லியல் ஆய்வு: இதனடிப்படையில் ஞானவாபி மசூதிக்கு நேற்று தொல்லியல் துறை வல்லுநர்கள் குழு சென்றது. அங்கு மசூதியை பார்வையிட்ட பின்னர் இன்று முதல் தொல்லியல் துறை ஆய்வு தொடங்கும் என தெரிவித்தனர். இன்று காலை 7 மணி முதல் ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறை வல்லுநர்கள் ஆய்வு நடத்த தொடங்கினர். அப்போது பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
உச்சநீதிமன்றம் தடை: இதனையடுத்து இந்த ஆய்வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. அப்போது ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, வாரணாசி நீதிமன்றத்தின் உத்தரவுப்படி தொல்லியல் அதிகாரிகள் புகைப்படம் எடுத்தல், கட்டிட அளவீட்டு பணிகளை மேற்கொண்டிருக்கின்றனர். ஒரு செங்கல்லை கூட பெயர்க்கவும் இல்லை என்றார். இதனையடுத்து ஞானவாபி மசூதியில் தொல்லியல் ஆய்வு நடத்த வாரணாசி நீதிமன்றம் அனுமதி அளித்த உத்தரவுக்கு ஜூலை 26-ந் தேதி வரை இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் மனுதாரர்கள் விருப்பப்பட்டால் அலகாபாத் உயர்நீதிமன்றத்தை அணுகலாம் எனவும் உச்சநிதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தினர்.