தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை குறைவாக பெய்திருக்கிறது. இதனால் குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையை நம்பியிருக்கும் விவசாயிகள் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர். முன்னதாக 12 ஆயிரம் கன அடி நீர் அணையில் இருந்து திறக்கப்பட்ட நிலையில், தற்போது 10 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது.
காவிரி நீர் நள்ளிரவு மயிலாடுதுறை மாவட்டம் வந்தடைந்தது
காவிரியில் நீர்வரத்து
தண்ணீர் தேவைக்கும், காவிரியில் வரும் நீர்வரத்தின் அளவிற்கு இடையில் வித்தியாசம் மிகவும் அதிகமாக இருக்கிறது. தற்போதைய சூழலில் பற்றாக்குறையை கர்நாடகாவில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரை கொண்டு தான் பூர்த்தி செய்து கொள்ள முடியும். இதற்கிடையில் நீர் வரத்து 5 ஆயிரம் கன அடியாக மேலும் குறைக்கப்பட்டது.
கர்நாடகா அரசுக்கு கோரிக்கை
எனவே தமிழகத்திற்கு தேவையான தண்ணீரை கர்நாடகா அரசு திறந்துவிட வேண்டும் என்று டெல்லி சென்று ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மனு அளித்தார். ஒருமுறை அல்ல, இரண்டு முறை இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி சென்று வலியுறுத்தினார்.
தமிழகத்திற்கு ஹேப்பி நியூஸ்
இந்நிலையில் தமிழக மக்களுக்கு மகிழ்ச்சியூட்டும் தகவல் தற்போது கிடைத்துள்ளது. அதாவது, கர்நாடகா மாநிலத்தில் உள்ள கே.ஆர்.எஸ், கபினி உள்ளிட்ட அணைகளில் இருந்து காவிரியில் திறந்து விடப்படும் நீரின் அளவு 12,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கபினி, கே.ஆர்.எஸ் அணையில் இருந்து நீர் திறப்பு
கபினி அணையில் இருந்து 10 ஆயிரம் கன அடி நீரும், கே.ஆர்.எஸ் அணையில் இருந்து 2,500 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது. தற்போது காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான குடகு, சிக்மகளூரு, மைசூரு உள்ளிட்ட மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் மேற்குறிப்பிட்ட இரண்டு அணைகளுக்கும் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து கொண்டிருக்கிறது.
நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு
குறிப்பாக கபினி அணைக்கு நீர்வரத்து 20 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது. கடந்த 2 நாட்களாக மழை வெளுத்து வாங்கிய நிலையில் கே.ஆர்.எஸ் அணையில் 2 அடி அளவிற்கு நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக நீர் திறப்பும் அதிகரிக்கப்பட்டிருக்கிறது.
மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு
தற்போது மேட்டூர் அணையில் இன்று (ஜூலை 24) நிலவரப்படி வினாடிக்கு 165 கன அடியாக அதிகரித்துள்ளது. டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர் மட்டம் 67.91 அடியாக இருக்கிறது. காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தால் மேட்டூர் அணை நீர் மட்டம் படிப்படியாக உயரும். விவசாயிகள் தேவையை பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.