விரைவில் தமன்னாவை திருமணம் செய்கிறார் விஜய் வர்மா

தமிழில் முன்னணி நடிகையாக வலம்வந்த தமன்னா, தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது ரஜினி நடித்த ‛ஜெயிலர்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் ஆக.,10ல் வெளியாகிறது. இவரும், பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவும் காதலித்து வருவதாக சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியானது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக இருவரும் இணைந்து ஒன்றாக ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இரவு நேரத்தில் வெளியே காரில் வலம்வந்த வீடியோவும் வெளியானது.

இதற்கிடையே இருவரும் சேர்ந்து ‛லஸ்ட் ஸ்டோரிஸ் 2' இணையத்தொடரில் நடித்திருந்தனர். அதில் இருவருக்கும் இடையிலான நெருக்கமான காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியது. சமீபத்தில் காதல் விவகாரம் குறித்து விஜய் வர்மா கூறுகையில், ‛நான் தமன்னாவை வெறித்தனமாக காதலிக்கிறேன்' என உறுதிப்படுத்தினார்.

இந்த நிலையில், விஜய் வர்மா ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டி: எங்கள் காதல் விவகாரம் வெளியில் தெரிந்த உடன் என் அம்மா எப்போது திருமணம் என்று தொடர்ந்து கேட்டுவருகிறார். நான் மார்வாடி சமூகத்தை சேர்ந்தவன் என்பதால், எங்கள் சமூகத்தில் ஆணுக்கு 16 வயது ஆனதுமே, திருமண பேச்சை ஆரம்பித்து விடுவார்கள். எனது திருமணம் குறித்த பேச்சு என் குடும்பத்தில் பல ஆண்டுகளாக இருந்து கொண்டுத்தான் இருக்கிறது. ஆனால், நான் நடிகராகி விட்டதால் அந்த பேச்சு சற்று ஓய்ந்து இருந்தது.

தற்போது தமன்னாவை காதலிப்பது அவர்களுக்கு தெரியவந்துள்ளதால், என் அம்மா ஒவ்வொரு முறை போன் செய்யும் போதும், எப்போது திருமணம் என்று கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். நான் அதற்கு பதில் அளிக்காமல் பேச்சை மாற்றிவிடுவேன்'' எனக் கூறினார். இதனால் விரைவில் விஜய் வர்மா – தமன்னாவின் திருமணம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.