108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும், 12 ஆழ்வார்களில் பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் அவதரித்த புண்ணியத் தலமாகவும் அறியப்படுவது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில்.
ஸ்ரீஆண்டாள் மனிதப்பிறவியெடுத்து இறைவனுக்குப் பாமாலை பாடி, பின் பூமாலை சூட்டிய தலம் என்றும் பெரியாழ்வார் பாடிய கோயில், பெரிய பெருமாள் எனும் சிறப்புப்பெயர் உள்பட பல்வேறு பெருமைகளைக் கொண்டது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில்.
இத்தகைய பிரசித்திப் பெற்ற ஆண்டாள் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் ஆண்டாள் அவதரித்த தினமான பூரம் நட்சத்திர நாளையொட்டி தேரோட்டத் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திரு ஆடிப்பூரத் திருவிழா கடந்த ஜூலை 14-ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து விழா நாள்களில் தினந்தோறும், ஆண்டாள்-ரெங்கமன்னார் திருப்பவனி நடைபெற்றது. 5-ம் நாள் நிகழ்ச்சியில் பெரியாழ்வார் மங்களாசாசனம் வைபவம் நடைபெற்றது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/07/IMG_20230722_131318.jpg)
தொடர்ந்து, இரவில், ஸ்ரீஆண்டாள் பெரிய அன்னவாகனத்திலும், ஸ்ரீரெங்கமன்னார் – பெரிய பெருமாள், சுந்தரராஜ் பெருமாள், ஸ்ரீநிவாசபெருமாள், திருத்தங்கால் அப்பன் ஆகியோர் கருட வாகனத்திலும், பெரியாழ்வார் சின்ன அன்னவாகனத்திலும் எழுந்தருளி 5 கருடசேவை நடைபெற்றது. ஆடிப்பூர விழாவில் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான ஆண்டாள் மடியில், கிருஷ்ணர் கோலத்தில் ஸ்ரீரெங்கமன்னார் தலைவைத்து சயனக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் வைபவம் திருவிழாவின் ஏழாம் நாளான வியாழக்கிழமை நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடிப்பூர திருத்தேரோட்டம் நேற்று முன் தினம் காலை 8:05 மணிக்குத் தொடங்கியது. தேரோட்டத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன், காவல் கண்காணிப்பாளர் ஶ்ரீநிவாசப் பெருமாள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வடம்பிடித்து இழுத்துத் தொடங்கி வைத்தனர்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/07/IMG_20230722_131335.jpg)
இந்நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்று ஆண்டாள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது பக்தர்கள் கோவிந்தா, கோபாலா முழக்கம் எழுப்பி பக்திப் பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆடிப்பூரத் தேரோட்டத்தையொட்டி பக்தர்களின் கூட்டநெரிசலைக் கட்டுப்படுத்தவும், திருட்டு மற்றும் அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும் தென்மண்டல ஐ.ஜி.அஸ்ரா கார்க் மேற்பார்வையில், டி.ஐ.ஜி. பொன்னி தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் தேரோட்டத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட பள்ளிக்கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.