டாக்கா: பெண்கள் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் அவுட் ஆன கோபத்தில் ‘ஸ்டம்ப்’களை தாக்கியதுடன், நடுவர் மற்றும் வங்கதேச கேப்டனிடமும் தன் அதிருப்தியை காட்டினார். இதற்கு, ‘ ஒரு வீராங்கனையாக கொஞ்சம் நாகரிகமாக நடந்திருக்க வேண்டும்’ என வங்கதேச பெண்கள் அணி கேப்டன் நிகர் சுல்தானா தெரிவித்தார்.
வங்கதேசம் சென்ற இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதல் இரு போட்டிகளின் முடிவில் தலா ஒரு வெற்றியுடன் இந்தியா, வங்கதேசம் அணிகள் சமநிலையில் இருந்தன.
கடந்த ஜூலை 22ல் நடந்த பைனலில் முதலில் விளையாடிய வங்கதேச பெண்கள் அணி 4 விக்கெட்டுக்கு 225 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய இந்திய பெண்கள் அணி நல்ல நிலையில் இருந்தபோதும், இறுதிக்கட்டத்தில் வரிசையாக விக்கெட்களை இழந்து 225 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது.
இதனால் போட்டி ‘டை’ ஆனது. இதனையடுத்து ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையை பெற்றது. இரு அணிகளுக்கும் கோப்பை பகிர்ந்தளிக்கப்பட்டது. இப்போட்டியில் இந்திய பெண்கள் அணி கேப்டன் ஹர்மன் ப்ரீத் கவுர் பேட்டிங் செய்தபோது எல்.பி.டபிள்யு முறையில் அவுட்டானதாக நடுவர் தெரிவித்தார். ஆனால், பந்து பேட்டில் பட்டுதான் சென்றதாக கூறி அதிருப்தி அடைந்த ஹர்மன்ப்ரீத் கவுர், ஆவேசத்தில் அங்கிருந்த ‘ஸ்டம்ப்’களை பேட்டால் தாக்கிவிட்டு நடுவரிடமும் தன் அதிருப்தியை கூறி வெளியேறினார்.
தயார்படுத்திக் கொள்ள வேண்டும்
இது ஐ.சி.சி., விதிமுறையை மீறும் செயலாக கருதப்படுவதால் அவருக்கு அபராதமோ அல்லது போட்டியில் விளையாட தடை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து போட்டி முடிந்து ஹர்மன்ப்ரீத் கவுர் பேசுகையில்,
இனி வங்கதேசம் வரும்போது நடுவர்களை எப்படி சமாளிப்பது என்றும் நாங்கள் எங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்’ எனக் கூறினார். மேலும் புகைப்படம் எடுக்கும் நிகழ்வில் வங்கதேச கேப்டனிடம், ‘நடுவரையும் அழைத்து நிற்க வையுங்கள் உங்களால் அவர் இல்லாமல் எதுவும் செய்ய முடியாது’ என்று கூறி வம்பிழுத்தார். இதனால் வங்கதேச கேப்டன் புகைப்படம் எடுக்காமல் கோபத்தில் சென்றுவிட்டார்.
நாகரிகம்
இதுகுறித்து வங்கதேச பெண்கள் அணி கேப்டன் நிகர் சுல்தானா கூறியதாவது: இது முழுக்க முழுக்க அவர் (ஹர்மன்ப்ரீத்) பிரச்னை. எனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர் நல்ல நடத்தையை வெளிப்படுத்தி இருக்க வேண்டும்.
ஒரு வீராங்கனையாக கொஞ்சம் நாகரிகமாக நடந்திருக்க வேண்டும். நான் அவரைப் பற்றி எந்தக் கருத்தும் சொல்ல விரும்பவில்லை. நான் வெளிப்படுத்த முடியாத சில பேச்சுக்களும் இருந்தன. ஆனால் சூழல் சரியில்லை என்று உணர்ந்து அந்த இடத்தை விட்டு வெளியேறினோம்.
இறுதியானது
அவர் அவுட் ஆகவில்லை என்றால் நடுவர்கள் எதற்காக அவுட் கொடுக்க போகிறார்கள்? இந்த நடுவர்கள் வங்கதேச ஆண்கள் கிரிக்கெட் அணி விளையாடும் போட்டிக்கு நடுவர்களாக இருந்தவர்கள். இவர்கள் நல்ல நடுவர்கள். இவரது அவுட்டை தவிர்த்து மற்ற விக்கெட்கள் குறித்து இந்திய கேப்டன் என்ன சொல்வார்?
நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நடுவரின் தீர்ப்புதான் இறுதியானது இதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். வங்கதேச பெண்கள் அணி கேப்டனின் கருத்தால் இந்திய ரசிகர்கள் கொதித்து போயுள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்