இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி வரும் நிலையில் கர்நாடகா மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
Collage Maker-25-Jul-2023-01-19-PM-9565பருவமழைநாடு முழுவதும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கினாலும் அதனை சமன் செய்யும் வகையில் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக வட மாநிலங்கள் கனமழையால் சின்னாபின்னமாகியுள்ளது. ஹிமாச்சல், ஜம்மு காஷ்மீர், உத்தாரகாண்ட், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் வெளுத்து வாங்கும் மழையால் பெரும் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது.
உயிரிழப்பு
நிலச்சரிவு மற்றும் வெள்ளப் பெருக்கால் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன. குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, சண்டிகர், உத்தகாண்ட் ஆகிய மாநிலங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. குஜராத்தில் கொட்டித்தீர்க்கும் மழையால், அகமதாபாத், ராஜ்கோட், கிர் சோம்நாத் உட்பட பல இடங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.
மகாராஷ்டிரா மழை
இதேபோல் மகாராஷ்டிரா மாநிலத்திலும் கனமழை கொட்டி வருகிறது. ராய்காட் மாவட்டத்தில் கொட்டி வரும் மழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி இன்னமும் தொடர்ந்து வரும் நிலையில், தற்போதும் அங்கு பலத்த மழை பெய்து வருகிறது.
ரெட் அலர்ட்இந்நிலையில் மும்பை, தானே, ராய்காட் ஆகிய மாவட்டங்களுக்கு இன்றும் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பால்கர் மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் கர்நாடகா மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கும் மிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
கேரளாவிலும் கனமழை பெய்து வருவதால் வயநாடு, கோழிக்கோட், கண்ணூர் மற்றும் மலப்புரம் ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் தெலுங்கானா மாநிலத்திற்கும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஹைதராபாத், ரங்கா ரெட்டி, மேட்சல், விகாராபாத், சங்கரெட்டி, மேடக், காமரெட்டி, மெஹபூப்நகர், நாகர்கர்னோல், சித்திபேட், ஜங்கான், ராஜண்ணா சிர்சில்லா மற்றும் கரீம்நகர் ஆகிய இடங்களில் அவ்வப்போது கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்திலும் மழை
ஜூலை 27 ஆம் தேதி வரை தெலுங்கானாவில் கனமழை தொடரும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. ஹைதராபாத்துக்கு நாளையும் நாளை மறுநாளும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இந்த வாரம் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.