ஜெயப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் உணவு பரிமாறவில்லை என்பதற்காகத் தனது மனைவியைக் கணவர் அடித்தே கொலை செய்துள்ளார். இத்தனையும் அந்த பெண் அங்குள்ள முக்கிய கட்சியில் டாப் நிர்வாகியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகமாகவே இருக்கிறது. அதிலும் குறிப்பாக ராஜஸ்தான் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகமாகவே இருப்பதாகப் புகார்கள் உள்ளனர்.
பெண்களுக்கு எதிராக ராஜஸ்தானில் நடக்கும் குற்றங்களைத் தடுக்க அம்மாநில அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
கொலை: இதற்கிடையே அங்கு இப்போது நடந்த ஒரு சம்பவம் தான் பகீர் கிளப்புவதாக இருக்கிறது. பொது வாழ்க்கையில் எவ்வளவு பெரிய நபராக இருந்தாலும் குடும்ப வன்முறையில் இருந்து பெண்களால் தப்ப முடிவதில்லை என்பதையே இது காட்டுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் மனைவியைக் கொன்றதற்காக 35 வயது இளைஞனை போலீசார் கைது செய்தனர். அந்த நபர் ரமேஷ் பெனிவால் என அடையாளம் காணப்பட்டுள்ளது. மனைவியைக் கொன்றுவிட்டு வீட்டை உள்பக்கம் பூட்டிய அந்த நபர், இரவு முழுக்க மனைவியின் சடலத்திற்கு அருகிலேயே இருந்ததாகவும் கூறப்படுகிறது.
அடுத்து நடந்த பகீர்: இரவு படுகொலை நடந்த நிலையில், மறுநாள் மதியம் போலீசார் வரும் வரை, அவர் இப்படியே இருந்துள்ளார். சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்துள்ளனர். காவலர்களைப் பார்த்த பிறகு தான் அந்த நபர் கதவைத் திறந்துள்ளார். இதில் கொலை செய்யப்பட்ட அந்த பெண் சுமன் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இருவருக்கும் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு திருமணமான நிலையில், ஓராண்டிற்கு முன்பு தான் இந்த புதிய அட்ரஸுக்கு வந்துள்ளனர். இவர்களின் குழந்தைகள் விடுதியில் உள்ளனர்.
இதில் கொலை செய்யப்பட்ட பெண் சுமன் ராஷ்டிரிய லோக்தந்திரிக் கட்சியின் மகளிர் அணியின் முன்னாள் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. சம்பவம் நடந்த நாளன்று இரவு இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இப்போது ஆத்திரமடைந்த அவரது கணவர் ரமேஷ், சுமனின் தலையில் கல்லைப் போட்டு கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.
இந்த படுகொலைக்குப் பிறகு உள்ள தனது மைத்துனரைத் தொடர்பு கொண்ட ரமேஷ் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். சம்பவ இடத்திற்கு அவரது மைத்துனர் உடனடியாக வந்த போதும் அவரையும் ரமேஷ் உள்ளே விடவில்லையாம். காலை வரை காத்திருந்து பார்த்துள்ளனர். இருப்பினும், அவர் கதவைத் திறக்காத நிலையில், வேறு வழியின்றி, வீட்டின் உரிமையாளர் போலீசாருக்கு போன் செய்துள்ளார்.
என்ன காரணம்: இந்த தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ள நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த கொடூரம் நடந்துள்ளது. ரமேஷ் அன்றிரவு வீட்டிற்கு லேட்டாக வந்த நிலையில், மனைவி உணவு வழங்காததால் ஆத்திரமடைந்து கொலை செய்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். ரமேஷ் மர வியாபாரத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்வதையே இது காட்டுகிறது. பொது வாழ்க்கையில் இருக்கும் பெண்கள் கூட வீட்டில் குடும்ப வன்முறையை எதிர்கொள்ளும் துயரமான சூழ்நிலையே இங்கு நிலவுவதை இது காட்டுவதாக இருக்கிறது.