`சினிமா எனக்குக் கட்டாயக் கல்யாணம்; எம்.ஜி.ஆர் `கட்றா தாலிய'னு சொன்னாரு' – இயக்குநர் மகேந்திரன்

பொதுமக்களுக்குப் பிடித்த தமிழ் சினிமா இயக்குநர்கள் சிலர் இருப்பர். ஆனால், இயக்குநர்களுக்குப் பிடித்த இயக்குநர் வெகுசிலரே. அப்படியான ஒருவர்தான் இயக்குநர் மகேந்திரன். தமிழ் சினிமாவின் திரைமொழியை மாற்றியவர்களில் குறிப்பிடத்தக்கவர். அவரின் ஆளுமைக்கு அவரின் படைப்புகளே உதாரணம். இன்று அவரின் பிறந்தநாள். அதையொட்டிய சிறிய பதிவு.

சினிமா மீது நாட்டமின்றி வலுக்கட்டாயமாக சினிமாவுக்கு வந்தவரின் படைப்புகள் தாம் ‘முள்ளும் மலரும்’, ‘உதிரிப்பூக்கள்’ என்றால் உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கலாம். ஆம், சினிமாவுடன் இலக்கியத்தை இணைத்ததில் முக்கிய பங்காளரான இயக்குநர் மகேந்திரன் சினிமாவுக்கு வர விரும்பியவர் அல்ல.

புதுமைப்பித்தனின் சிறுகதையை மையப்படுத்திதான் ‘உதிரிப்பூக்கள்’ திரைப்படத்தை படமாக்கியிருக்கிறார். சிவாஜி கணேசனின் ‘தங்கப்பதக்கம்’ திரைப்படத்திற்கு திரைக்கதை எழுதி எழுத்தாளராக வெளியுலகில் அறியப்பட்டார். எழுத்தாளர், இயக்குநர் எனப் பயணித்தவர் நடிகராகவும் ‘காமராஜ்’, ‘தெறி’, `பேட்ட’ ஆகிய படங்களில் வியக்க வைத்தார். மகேந்திரனின் 84 வது பிறந்தநாள் இன்று. அவர் மரித்தாலும், அவரது படைப்புகள் என்றும் தமிழ் சினிமாவில் கோலோச்சி நிற்கும். அவர் பேட்டிகளில் பகிர்ந்த சில நாஸ்டால்ஜியா பக்கங்கள் இங்கே…

Director Mahendran

சினிமாவின் அறிமுகம் குறித்து இயக்குeர் மகேந்திரன்,”சினிமாவுக்கு வரலைனா எங்கேயாவது கிளெர்க் வேலைக்கு போயிருப்பேன். எஸ்.எஸ்.எல்.சி கூட பெயில் ஆகியிருப்பேன். சினிமா மேல எனக்கு நாட்டமேயில்ல. சினிமாங்கிறது கல்யாணம் மாதிரி. சிலர் விருப்பபட்டுப் பண்ணிப்பாங்க. எனக்கு கட்டாய கல்யாணமா சினிமா அமைஞ்சுருச்சு. எம்.ஜி.ஆர் ‘கட்றா தாலிய’னு சொன்னாரு. அதுக்குனு நான் சினிமாவக் கொடுமைப்படுத்தல. எனக்கு தெரிஞ்ச சினிமாவ நான் எடுத்தேன். நான் வீட்டுல ரொம்ப பொறுப்பான பையன். என்கூட பிறந்தவங்கள பார்த்துக்கனும்னு பொறுப்போட இருந்தேன். நான் எம்.ஜி.ஆர் கூட இருந்தேன். அதைப் பார்த்துட்டு பல தயாரிப்பாளர்கள் என்ன கூப்பிட்டாங்க. என் கதைகள் ஹிட்டாச்சு. அப்புறம் சென்னைல இருந்து ஓடி போயிட்டேன். எம்.ஜி ஆர் என்னைக் கூப்பிட்டு விட்டாரு.

இது மாதிரி மூனு தடவ சென்னைல இருந்து ஓடிப் போயிருக்கேன். பிறகு, டைரக்‌ஷன் பண்ண ஆரம்பிச்சேன். எனக்குப் பிடிக்காத விஷயங்கள தள்ளிவச்சிட்டு படம் எடுக்கனும்னு முடிவு பண்ணேன். அது தான் ‘முள்ளும் மலரும்’.” என்றவர் எம்.ஜி.ஆர் உடனான நினைவுகள் குறித்து, “ஒரு நாள் காலேஜ்ல மூனு மாணவர்கள் நாடகம், இலக்கியம், சினிமா பத்தி பேசணும். நான் சினிமா பத்தி பேசுனேன். அன்னைக்கு ‘சினிமாவில் நவரசங்கள் எப்படி உண்மைக்கு புறம்பா சித்தரிக்கப்படுது’ என்ற தலைப்புல முதல்ல பேசலாம்னு விரும்பினேன்.ஆனால், அதுக்கு முன்னாடி எங்க காலேஜ்ல காதல் விவகாரம் நடந்தது. அதைப் பத்தி பேசலாம்னு முடிவு பண்ணிப் பேசுனேன்.

Life has no second show – Director Mahendran

எல்லாரும் கைதட்டுனாங்க. அந்த சத்தம் கேட்டதும் ஆட்டோகிராப் போட்டுட்டு இருந்த எம்.ஜி.ஆர் என்னைப் பார்த்தார். அப்புறம்,’காதலிக்கிற யாராச்சும் டூயட் பாடுறாங்களா,சினிமால மட்டும் எப்படி மூனு நாள் டூயட் பாடுறாங்கனு’ பேசுனேன். அவர் கூட்டத்த பார்த்து இன்னும் நல்லா கைதட்ட சொன்னார். அதைப் பார்த்துட்டு ஒரு பேப்பர்ல எதோ எழுதி என் சட்டை பாக்கெட்ல வச்சுட்டு போயிட்டாரு . ‘நல்ல கருத்து, நல்ல விளக்கம், நகைச்சுவையுடன் கூடிய வன்மையான பேச்சு, எதிர்காலத்தில் சிறந்த விமர்சகராக இருக்கத் தகுதியானவர், அன்பன் எம்.ஜி.ராமச்சந்திரன்’. அப்படிங்கிறது தான் அந்த பேப்பர்ல எழுதியிருந்தது.”

தனது வாழ்க்கையின் நகர்வுகள், நிகழ்வுகள் குறித்து கூறிய அவர்,” நான் குறை மாசத்துல பிறந்தவன். என் அம்மாகிட்ட எல்லாரும்,’உன் புள்ள பிழைச்சுட்டான். ஆனால், மத்த பிள்ளைங்க மாதிரி இருக்கமாட்டான்’னு சொன்னாங்க. இந்த வார்த்தைதான் என்ன மாத்துச்சுனு நினைக்கிறேன். மத்த பசங்க மாதிரி என்னால ஓடி விளையாட முடியாது. மத்தவங்க பண்ணாத விஷயங்கள நான் பண்ணனும்னு முடிவு பண்ணினேன். லைப்ரரி பக்கம் ஒருத்தனும் வரமாட்டான். அர்த்தம் புரியலைனாலும் எல்லா மொழி புத்தகங்களையும் படிக்க ஆரம்பிச்சேன். புத்தகம்தான் என் உலகமா மாறுச்சு. கல்கி, சாண்டில்யன், தி.ஜானகிராமன் போன்ற ஆளுமைகளோட படைப்புகள படிச்சேன்.

மகேந்திரன்

சினிமாவுல முதல்ல எழுத்தாளரானேன். பிறகு, இயக்குனர் ஆனேன்” என ஊக்கமளிப்பவர்தான் முதன் முதலில் பொன்னியின் செல்வன் திரைக்கதையில் எம்.ஜி.ஆருடன் பெரும் பங்காற்றியவர். அது குறித்து அவர்,”எம்.ஜி.ஆர் தான் என்ன பொன்னியின் செல்வன் திரைக்கதை எழுதச் சொன்னாரு. பலரோட கதைகள பார்த்தாரு. அதுக்கு அப்புறம் என்னோட திரைக்கதையை ஓகே பண்ணாரு. அதை திரைக்கதையா பண்றது ரொம்ப கஷ்டம். நான் இப்போ கொஞ்ச நாள் முன்னாடி படிச்சு பார்த்தேன். பிரமிச்சு போயிட்டேன். 30 பக்கத்து மேல என்னால போகவே முடியல. நான் எம்.ஜி.ஆருக்காக பண்ணின பொன்னியின் செல்வன் திரைக்கதையெல்லாம் எங்கப் போச்சுனே தெரில.” எனப் பகிர்ந்திருக்கிறார்.

இயக்குநர் மகேந்திரன் இயக்கிய படங்களில் உங்களுக்குப் பிடித்த திரைப்படத்தைக் கமென்ட்டில் பதிவிடுங்கள்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.