மணிப்பூரில் இரண்டு சமூக மக்களுக்கு இடையில் வெடித்த மோதல் இரண்டு மாதங்களை கடந்து தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஏதோ ஒரு மூலையில், எங்கோ ஒரு மாநிலத்தில் பிரச்சினை என சாமானியர்கள் சைலண்ட் மோடில் இருந்து வந்தனர். அரசியல் கட்சிகளும், சில அமைப்புகளும் மட்டும் அவ்வப்போது கண்டனக் குரல் எழுப்பி வந்தன. இந்த சூழலில் மணிப்பூர் மாநிலத்தில் இணையச் சேவை துண்டிப்பால் உள்ளே நடக்கும் விஷயங்கள், பிரச்சினைகள் வெளியுலகிற்கு தெரியவில்லை.
மணிப்பூர் வீடியோ
சமீபத்தில் வீடியோ ஒன்று வெளியாகி சாமானியர்கள் முதல் அரசியல் கட்சி தலைவர்கள் வரை பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. நாகரிக சமூகத்தில் இப்படி மிருகத்தனம் கொண்ட மனிதர்களா? என்று ஆவேசமாக கேட்க வைத்தது. இந்த சம்பவம் கடந்த மே மாதமே நடந்து விட்டதாக சொல்லப்படுகிறது. வீடியோ மட்டும் தான் தற்போது வெளியாகியுள்ளது. அப்படியெனில் இன்னும் எத்தனை கொடூரங்கள்நடந்திருக்குமோ என பதற வைக்கிறது.
மழைக்கால கூட்டத்தொடர்
தற்போது போராட்டத்தின் வீரியம் சற்றே அதிகரித்துள்ளது. தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் கண்டன கூட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வருகின்றனர். பொதுமக்களும் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் பெரிய அலையாக பார்க்க முடியவில்லை.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரிலும் மணிப்பூர் விவகாரம் தான் பேசுபொருளாக மாறியிருக்கிறது. இதுபற்றி பிரதமர் மோடி வாய் திறக்க வேண்டும், அவையில் விவாதிக்க அனுமதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
காங்கிரஸ் ட்வீட்
இதனால் சலசலப்பு ஏற்பட்டு அவை முடக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படம் ஒன்று பதிவிடப்பட்டுள்ளது. அதில், இரண்டு விஷயங்கள் ஒப்பிடப்பட்டுள்ளன. 2012ஆம் ஆண்டு நிர்பயா கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தை அடுத்து டெல்லியின் வீதிகளில் மக்கள் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுத்தனர். இது ஒரு படமாக இடம்பெற்றுள்ளது.
டெல்லியில் மக்கள் போராட்டம்
அடுத்து, 2023… சமீபத்தில் மணிப்பூர் வீடியோ வெளியான நிலையில் நாட்டு மக்கள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டிருப்பதை மறுக்க முடியாது. ஆனால் பெரிய அலையாக போராட்டம் வெடித்திருக்கிறதா? என்றால் இல்லை என்று தான் சொல்ல முடியும். இதை உணர்த்தும் வகையில் டெல்லியின் மற்றொரு புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
நிர்பயா சம்பவம்
இதற்கு கலவையான எதிர்வினைகள் ட்விட்டரில் வந்த வண்ணம் இருக்கின்றன. அதாவது, நிர்பயாவிற்கு ஒரு நீதி, மணிப்பூர் பெண்களுக்கு ஒரு நீதியா? மக்கள் மத்தியில் போராட்டத் தீ இன்னும் பற்றவில்லையா? என்பது போல கேள்வி எழுப்பியுள்ளனர். நிர்பயா சம்பவம் நடந்த போது மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது. தற்போது மணிப்பூர் சம்பவம் நடந்துள்ள நிலையில் மத்தியில் பாஜக ஆட்சியில் இருக்கிறது.
நீதி வேண்டும்
ஒருவேளை காங்கிரஸ் கட்சி மீது இல்லாத நம்பிக்கை பாஜக மீது மக்களுக்கு வந்திருக்கிறதா? அப்படித்தான் என அக்கட்சியின் ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் இவர்களின் சண்டை ஒருபக்கம் இருக்கட்டும். மணிப்பூர் விஷயத்தில் நீதி வேண்டும் என்பது தான் சாமானியர்களின் குரலாக ஒலிக்கிறது.