“நீங்கள் என்ன சொன்னாலும் நாங்கள் `இந்தியா'தான் மிஸ்டர் மோடி..!" – ராகுல் காந்தி காட்டம்

மணிப்பூர் விவகாரம் இந்தியா மட்டுமல்லாமல், உலக நாடுகளுக்கு மத்தியிலும் பேசுபொருளாகியிருக்கும் நிலையில், நாடாளுமன்றத்தில் விவாதிப்பது தொடர்பாக எதிர்க்கட்சிகளுக்கும், ஆளும் பா.ஜ.க அரசுக்குமிடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த நிலையில், பா.ஜ.க நாடாளுமன்றக் குழு வாராந்திர கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “சரியான இலக்கு இல்லாத எதிர்க்கட்சிகளை நான் இப்போதுதான் பார்க்கிறேன். நிரந்தரமாக எதிர்க்கட்சிகளாகவே இருக்க வேண்டும் என்று விரும்புவதுபோல இருக்கிறது அவர்களின் செயல்பாடு.

பிரதமர் மோடி

இந்தியா என்று பெயர் சூட்டிக்கொண்டு அவர்களை அவர்களே பெருமையாகப் பேசிக் கொள்கிறார்கள். இந்திய தேசிய காங்கிரஸ், கிழக்கு இந்திய கம்பெனி, இந்திய முஜாஹிதீன், பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா ஆகியவற்றிலும் இந்தியா என்ற பெயர் இருக்கிறது. எனவே எதிர்க்கட்சிகள் தங்கள் கூட்டணிக்கு இந்தியா என்று பெயர் வைப்பதால் எந்த மாற்றமும் ஏற்படாது” என்றார். இதற்கு `இந்தியா’ கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் பலர் எதிர்வினையாற்றியிருக்கின்றனர்.

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “பிரதமரே… நீங்கள் வடகிழக்கில், இந்தியாவின் Act East policy-யைப் பார்க்கவில்லை, ஆனால் கிழக்கு இந்திய நிறுவனத்தைப் கவனிக்கிறீர்கள்! இந்த இந்தியா பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியைத் தோற்கடித்தது. இந்தியன் முஜாஹிதீனை இந்தியா தோற்கடித்தது. எனவே, தற்போதைய முக்கியப் பிரச்னையான மணிப்பூரில் நடக்கும் கொடூர வன்முறை குறித்து நாடாளுமன்றத்தில் எப்போது அறிக்கை அளிப்பீர்கள்… மணிப்பூர் மக்களின் காயங்கள் சரி செய்யப்பட்டு அங்கு அமைதி எப்போது திரும்பும்… இப்போது பிரதமரே திசைத் தெரியாதவராகிவிட்டார். எதிர்க்கட்சிகள்தான் நாட்டிற்கு வழிகாட்டி வருகின்றன” எனத் தெரிவித்தார்.

ராகுல் காந்தி

அதேபோல, முன்னாள் எம்.பி-யும், காங்கிரஸின் முக்கியத் தலைவருமான ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “மிஸ்டர் மோடி, நீங்கள் எப்படி வேண்டுமானாலும் எங்களைச் சொல்லிக்கொள்ளுங்கள். ஆனாலும் நாங்கள் இந்தியாதான் (INDIA). அதனால், நாங்கள், மணிப்பூரை குணப்படுத்தவும், அங்கு கண்ணீர் சிந்தும் ஒவ்வொரு பெண் மற்றும் குழந்தையின் கண்ணீரைத் துடைக்கவும் உதவுவோம். மக்களிடம் அன்பையும் அமைதியையும் திரும்பக் கொண்டு வருவோம். மணிப்பூரில் இந்தியா (INDIA) என்ற எண்ணத்தை மீண்டும் உருவாக்குவோம்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி மஹுவா மொய்த்ரா, “பிரதமர் மோடி இந்தியாவின் பிரதமராக இருப்பது வெட்கக்கேடானது. மிக வலுவாக இருக்கும் எதிர்க்கட்சிகளைப் பார்த்துப் பயந்து, அதை வெளிக்காட்டாமல் எதிர்க்கட்சிகளை தீவிரவாதக் குழுக்களுடன் ஒப்பிடுகிறார். அதற்கு காரணம், INDIA கூட்டணி மணிப்பூர் விவகாரத்தில் அரசின் பொறுப்புக் கூறலை அழுத்தமாக முன்வைக்கிறது. எனவே, பிரதமர் மோடி, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு பதிலளிக்க வேண்டும். அதைவிட்டு அவையிலிருந்து ஓடக் கூடாது” எனக் காட்டமாகத் தெரிவித்திருக்கிறார்.

மஹுவா மொய்த்ரா

அதே கட்சியின் மற்றொரு எம்.பி டெரிக் ஓ பிரையன், “பிரதமர் மோடி ஓர் அரசியல் கட்சிக் கூட்டணியை பயங்கரவாதக் குழுவுடன் ஒப்பிடுவது மணிப்பூர் நெருக்கடியிலிருந்து பொது மக்களை திசைதிருப்பும் மோசமான நடவடிக்கை. நாடாளுமன்றத்திற்கு வெளியே பேசுவதற்குப் பதிலாக, மணிப்பூர் விவகாரத்தை அவையில் விவாதிக்குமாறு அவருக்கு சவால் விடுகிறோம். அரசியலைவிட மக்களுக்குத்தான் எப்போதும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

டெல்லியில் ஆட்சியில் இருக்கும் ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி சத்ருகன் சின்ஹா, “மன் கி பாத் முடிந்துவிட்டது. இனி பிரதமர் வாய்திறந்து மணிப்பூர் பற்றி பேச வேண்டும். மணிப்பூர் வன்முறைக் குறித்தான விவாதத்துக்கு 25 சதவிதத்துக்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் நோட்டீஸ் கொடுத்திருக்கின்றனர். இன்று மல்லிகார்ஜுன கார்கே மணிப்பூர் பற்றி பேச விரும்பியபோது, ​​​​பா.ஜ.க உறுப்பினர்கள் சத்தம் போடத் தொடங்கினர். அதனால் மணிப்பூரில் நடக்கும் மிருகத்தனம் மற்றும் கொடூரம் குறித்த விவாதம் ஒடுக்கப்படுகிறது. இப்போது அவர்கள் INDIA-வையும் வெறுக்கத் தொடங்கியிருக்கிறார்கள்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.