நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் ஒருநாள் கூட ஆரோக்கியமான முறையில் விவாதம் நடக்கவில்லை. மணிப்பூர் விவகாரத்தை கையில் எடுத்துள்ள எதிர்க்கட்சிகள் மக்களவை, மாநிலங்களவை ஆகியவற்றில் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது.
மணிப்பூர் விவகாரம்
ஆனால் அதற்கான வாய்ப்பளிக்கப்பட வில்லை என்று எதிர்க்கட்சிகளும், விவாதிக்க தயாராக இருக்கிறோம் என்று ஆளுங்கட்சியும் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றனர். குறிப்பாக நாடாளுமன்றத்தில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி பேச வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். இப்படியே போனால் கடந்த கூட்டத்தொடரை போல முழுவதும் முடங்குவதற்கு தான் வாய்ப்புகள் அதிகம்.
நம்பிக்கையில்லா தீர்மானம்
இந்நிலையில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் கூடி ஆலோசித்து வருவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் அனைவரும் எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் அறையில் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
எதிர்க்கட்சிகள் கூடி ஆலோசனை
இதில் காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ், பிரமோத் திவாரி, திரிணாமூல் காங்கிரஸ் டெரிக் ஓ பிரையன்,
திமுக
எம்.பிக்கள் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். நம்பிக்கையில்லா தீர்மானம் என்பது ஆட்சியை கலைக்க முன்னெடுக்கப்படும் விஷயம். இது எப்போது வெற்றி பெறும் என்றால், கூட்டணி கட்சிகளின் தயவில் ஆட்சியை வைத்திருக்கும் போது.
மக்களவையில் பாஜகவின் பலம்
கடைசி நேரத்தில் யாராவது கழன்று கொள்ள வாய்ப்பிருக்கிறது. ஆனால் தற்போது மக்களவையில் பாஜக 303 என தனிப்பெரும்பான்மை உடன் இருக்கிறது. மொத்தமுள்ள 545 இடங்களில் 272ஐ கைப்பற்றி இருந்தாலே போதும். அப்படியிருக்க பாஜகவை நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் வீழ்த்துவது என்பது இயலாத காரியம்.
மாநிலங்களவையில் பாஜகவின் பலம்
அதேசமயம் மாநிலங்களவையில் பாஜகவிற்கு தனிப்பெரும்பான்மை இல்லை. மொத்தமுள்ள 245 இடங்களில் பாஜக 93 இடங்களை தன்வசம் வைத்திருக்கிறது. இருப்பினும் தேசிய ஜனநாயக கூட்டணியில் 111 இடங்களும், இந்தியா கூட்டணி வசம் 98 இடங்களும் இருக்கின்றன.
20 ஆண்டுகளுக்கு பின்பு
ஒருவேளை நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டால் கடந்த 20 ஆண்டுகளில் இதுவே முதல்முறை ஆகும். கடைசியாக 2003ல் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக நம்பிக்கை கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.