‘மேரிகோம்’, ‘அலிகார்’, `சரப்ஜித்’, பிரதமர் மோடியின் வாழ்க்கை கதையான ‘PM நரேந்திர மோடி’ போன்ற திரைப்படங்களைத் தயாரித்தவர் சந்தீப் சிங்.
பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவரான இவர், தற்போது முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் வாழ்க்கைக் கதையை மையமாகக் கொண்டு படத்தைத் தயாரித்து வருகிறார். இதனிடையே சந்தீப் சிங் சில மாதங்களுக்கு முன்பு திப்பு சுல்தான் வாழ்க்கையை மையமாகக்கொண்டு படத்தைத் தயாரிக்க உள்ளதாகத் தெரிவித்திருந்தார்.
படத்தைப் பற்றி அறிவித்தபோது பேசிய சந்தீப் சிங் , “ நமது வரலாற்றுப் பாடப்புத்தகங்களில் அவரை நல்லவர், போல காட்டியிருக்கின்றனர். ஆனால் அவருடைய மறுபக்கம் யாருக்கும் தெரியாது. அதனால் வருங்கால சந்ததியினருக்காக அவருடைய இருண்ட பக்கத்தை என் படத்தின் மூலம் வெளிப்படுத்த விரும்புகிறேன்.” என்று கூறியிருந்தார்
இவரின் இந்த கருத்திற்கு பலரும் கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் சந்தீப் சிங் திப்பு சுல்தான் திரைப்படத்தை கைவிட்டு விட்டதாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட அவர், “என்னையும், என் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களையும் அச்சுறுத்துவதைத் தவிர்க்குமாறு என் சகோதர, சகோதரிகளாகிய உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.
நான் யாருடைய மனதையும், மத உணர்வுகளையும் புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கோரிகிறேன். எந்தவித நோக்கமும் எனக்கு இல்லை. அனைத்து நம்பிக்கைகளையும் மதிக்க வேண்டும் என்பதை உறுதியாக நம்புகிறவன் நான். இந்தியர்களாக நாம் ஒற்றுமையாக இருப்போம்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.