சென்னை: விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியான இருவரது குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், தாயில்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் தனியாருக்குச் சொந்தமான வெடிபொருள் தொழிற்சாலையில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 25) பிற்பகல் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீவிபத்தில் விஸ்வநத்தம் கிராமத்தைச் சேர்ந்த முருகேஸ்வரி (39), க/பெ.ராமச்சந்திரன் மற்றும் மண்குண்டாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பானு (39), க/பெ.சண்முகம் ஆகிய இருவரும் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன், என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள மண்குண்டாம்பட்டியைச் சேர்ந்த சண்முகையா என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை தாயில்பட்டியில் இயங்கி வருகிறது. நாக்பூரில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடி பொருள் கட்டுப்பாட்டுத்துறையின் அனுமதி பெற்ற இந்த பட்டாசு ஆலையில் 30-க்கும் மேற்பட்ட அறைகளில் பேஃன்ஸி ரக பட்டாசுகள் உள்பட பல வகையான பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆலையில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
ஆலையின் ஒரு பகுதியில் இயந்திரத்தின் மூலம் கேப்வெடி தயாரிக்கும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்று வந்தது. அப்போது, ரசாயன மூலப்பொருள்கள் உராய்வு ஏற்பட்டு திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கேப் வெடி தயாரித்துக்கொண்டிருந்த விஸ்வநத்தத்தைச் சேர்ந்த ராமர் மனைவி முருகலட்சுமி, மண்குண்டாம்பட்டியைச் சேர்ந்த சண்முகம் மனைவி பானு ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மற்ற அறைகளில் பட்டாசு தயாரித்துக்கொண்டிருந்த தொழிலாளர்கள் அனைவரும் தப்பியோடியதால் காயமின்றித் தப்பினர். தகவலறிந்த சிவகாசி, சாத்தூர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். உயிரிழந்த இருவரது உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வெம்பக்கோட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.