சென்னை: Blue Sattai Maran (ப்ளூ சட்டை மாறன்) மாவீரன் படம் 75 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கும் சூழலில் ப்ளூ சட்டை மாறனின் ட்வீட் சர்ச்சையாகியுள்ளது.
சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் படம் கடந்த 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பிரின்ஸ் படத்தின் தோல்வியால் ரொம்பவே துவண்டிருந்த சிவகார்த்திகேயன் ரசிகர்கள் இந்தப் படத்தை ரொம்பவே எதிர்பார்த்தார்கள். மடோன் அஸ்வின் இயக்க, மிஷ்கின், அதிதி ஷங்கர், சரிதா, யோகிபாபு உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். மாவீரன் நிச்சயம் காப்பாற்றும் என்ற நம்பிக்கையோடு ரசிகர்கள் படம் பார்க்க சென்றார்கள்.
காப்பாற்றிய மாவீரன்: அவர்களது நம்பிக்கை பொய்த்துப்போகாதபடிதான் படமும் அமைந்திருந்தது. ஃபேண்டஸி ஜானரில் உருவாகியிருந்தாலும் ரசிகர்களுக்கு எளிதாக கனெக்ட் ஆகும் வகையில் மடோன் படத்தை இயக்கியிருந்தார். அதுமட்டுமின்றி படத்தில் அரசியல்வாதிகளின் பித்தலாட்டம், காமிக் தொடர்பான விஷயங்கள் இருந்ததால் படத்துக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பை கொடுதனர்.
சிவாவின் நடிப்பு: அதேபோல் சிவகார்த்திகேயனின் நடிப்பும் பலரை கவர்ந்திருக்கிறது. பயந்த சுபாவம் உள்ள இளைஞனாகவும், ஆக்ஷன் காட்சிகளில் அதிரடி காட்டும் நாயகனாகவும் வேறு வேறு ஸ்டைலில் நடித்திருந்தார். எனவே டாக்டர் படத்துக்கு பிறகு இந்தப் படம்தான் சிவகார்த்திகேயனின் நடிப்புக்கு தீனி போட்டிருக்கிறது. இதுபோன்று இனி வரும் படங்களில் தனது நடிப்பில் அவர் வித்தியாசத்தை காண்பிக்க வேண்டும் எனவும் அவரது ஃபேன்ஸ் கூற ஆரம்பித்திருக்கின்றனர்.
வசூல் மழை: படத்துக்கு விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பு கிடைக்க மறுபக்கம் வசூல் ரீதியாகவும் குட் ரெஸ்பான்ஸே கிடைத்துவருகிறது. படம் வெளியான ஒரே வாரத்தில் 50 கோடி ரூபாயை வசூலித்தது. தற்போது படத்தை தயாரித்த சாந்தி டாக்கீஸ் நிறுவனம் மாவீரன் படம் 75 கோடி ரூபாயை உலகளவில் வசூலித்திருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. எனவே மாவீரன் விரைவில் 100 கோடி ரூபாய் க்ளப்பில் இணையும் என்கின்றனர் எஸ்கேவின் ரசிகர்கள்.
திட்டிய ப்ளூ சட்டை மாறன்: இந்நிலையில் சாந்தி டாக்கீஸின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கெட்ட வார்த்தையில் திட்டியிருக்கிறார் பிரபல திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன். அவரது இந்த ட்வீட் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் விமர்சகர் என்றால் எப்படி வேண்டுமானாலும் பேசலாமா என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர்.
பதிலடி கொடுத்த சிவா ரசிகர்கள்: இந்த ட்வீட்டை பார்த்து கொந்தளித்து போன சிவகார்த்திகேயனின் ரசிகர்கள், ப்ளூ சட்டை மாறன் பயன்படுத்திய வார்த்தையை குறிப்பிட்டு, நீங்கள் ஒரு படம் எடுத்தீர்களே ஆண்ட்டி இந்தியன். அப்போது பாரதிராஜாவை வைத்தெல்லாம் அந்தப் படத்துக்கு விளம்பரம் செய்தீர்களே. அப்போதும் இதேபோல்தான் செய்தீர்களா என அவரது ட்வீட்டில் கமெண்ட் மூலம் பதிலடி கொடுத்துவருகின்றனர்.