ஐதராபாத்: கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனி தயாரிப்பு நிறுவனத்தை துவக்கி தமிழில் தன்னுடைய முதல் படத்தை தயாரித்து முடித்துள்ளார்.
ஹரீஷ் கல்யாண், இவானா, நதியா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடிக்க உருவாகியுள்ள எல்ஜிஎம் படம் வரும் 28ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.
குடும்ப சென்டிமெண்டை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்தின் பிரமோஷன்களில் தோனி, சாக்ஷி தோனி உள்ளிட்டவர்கள் பங்கேற்று வருகின்றனர்.
சாக்ஷி தோனிக்கு பிடித்த ஹீரோ: சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார் பிரபல கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனி. தற்போது ஐபிஎல்லின் மட்டுமே விளையாடி வரும் தோனி, விளையாட்டை தவிர்த்து மற்ற துறைகளிலும் தன்னுடைய இன்வெஸ்ட்மென்டை செய்து வருகிறார். அந்த வகையில் தன்னுடைய பெயரில் தோனி என்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனத்தை துவங்கியுள்ள தோனி, தமிழில் தன்னுடைய முதல் படத்தை தயாரித்துள்ளார். எல்ஜிஎம் என்று பெயரிடப்பட்டுள்ள அந்தப் படம் வரும் 28ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.
ஹரீஷ் கல்யாண், இவானா, நதியா, யோகிபாபு உள்ளிட்டவர்கள் நடித்துள்ள இந்தப் படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்கியுள்ளார். படம் ரிலீசாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், கடந்த சில தினங்களாக படத்தின் பிரமோஷன்கள் மிகவும் சிறப்பான வகையில் நடந்து வருகிறது. இந்தப் பிரமோஷன்களில் தோனி, அவரது மனைவி சாக்ஷி தோனி, ஹரீஷ், இவானா உள்ளிட்டவர்கள் பங்கேற்று வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் இதன் பிரமோஷன்கள் நடைபெற்றன.
சில தினங்களுக்கு முன்பு படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் தோனி உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட யோகிபாபு, தனக்கு கிரிக்கெட்டில் அதிகமான ஆர்வம் உள்ளதாகவும் சிஎஸ்கேவில் வாய்ப்பு கொடுப்பீர்களா என கேட்க, ராயுடு ஓய்வு பெற்றுள்ளதால் அணியில் ஒரு இடம் காலியாக உள்ளதாகவும் தான் நிர்வாகத்திடம் பேசுவதாகவும் நகைச்சுவையுடன் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் கேக் வெட்டியபோது, யோகிபாபுவிடம் தொடர்ந்து காமெடி செய்தார் தோனி. கேக் வெட்டி, தனக்கு கொடுப்பார் என்று அவரையே யோகிபாபு பார்த்துக் கொண்டிருக்க, கேக்கை வெட்டி, தானே சாப்பிட்டார் தோனி. மேலும் யோகிபாபுவை பார்த்து க்யூட்டாக சிரிக்க, யோகிபாபு என்ன செய்வது என்று தெரியாமல் முழிக்கும் நிலை ஏற்பட்டது. இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.
இந்நிலையில் ஐதராபாத்திலும் தோனி, சாக்ஷி உள்ளிட்டோர் பிரமோஷனில் ஈடுபட்டனர். செய்தியாளர்களிடம் பேசிய சாக்ஷி தோனி, தான் அல்லு அர்ஜூனின் தீவிர ரசிகை என்று தெரிவித்தார். அவரது அனைத்து படங்களையும் பார்த்துள்ளதாக கூறியுள்ளார். அப்போதெல்லாம் நெட்பிளிக்ஸ் உள்ளிட்டவை இருக்காது என்பதால் யூடியூபில் வெளியாகும் அல்லு அர்ஜூன் படங்களின் இந்திப் பதிப்பை பார்த்துதான் தான் வளர்ந்ததாகவும் சாக்ஷி குறிப்பிட்டுள்ளார்.
எல்ஜிஎம் படத்தின் கதை சாக்ஷியின் ஐடியாவில் உருவானதாக கூறப்படுகிறது. திருமணத்திற்கு முன்னதாக தன்னுடைய மாமியாரை புரிந்துக் கொள்ளும்வகையில் இவானா ட்ரிப் ஒன்றை திட்டமிட, அந்த டிரிப்பில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது. பேமிலி என்டர்டெயினராக உருவாகியுள்ள இந்தப் படம் ரசிகர்களை வெகுவாக ஈர்க்கும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். சிஎஸ்கே மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்துள்ள தோனி, தன்னுடைய முதல் படத் தயாரிப்பையும் தமிழிலேயே துவங்கியுள்ளார். அவருக்கு இந்தப்படம் சிறப்பான என்ட்ரியை ஏற்படுத்திக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்.