வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: டுவிட்டர் சமூக வலைதள நிறுவனத்தின் லோகோ ‘எக்ஸ்’ எழுத்தாக மாற்றப்பட்டுள்ள நிலையில், கடைசி ரயில் பெட்டியின் பின்புறம் இடம் பெறும் ‘எக்ஸ்’ குறியீடு போன்று உங்கள் லோகோ இருப்பது தெரியுமா என்று தென்மேற்கு ரயில்வே கேள்வி எழுப்பியது வைரலாகியுள்ளது.
உலகெங்கும் மிகவும் பிரபலமான டுவிட்டர் சமூக வலைதளத்தை, உலகின் பெரும் பணக்கார தொழிலதிபரான எலன் மஸ்க் கடந்தாண்டு வாங்கினார். அதில் இருந்து நிர்வாகம் உள்ளிட்டவற்றில் பல மாற்றங்களை அவர் செய்து வருகிறார்.
அந்த வகையில் டுவிட்டர் லோகோவை மாற்றப்போவதாக அறிவித்தார். அதன்படி, ‘எக்ஸ்’ என்ற ஆங்கில எழுத்தை டுவிட்டர் லோகோவாக மாற்றி எலான் மஸ்க் அறிவித்தார். இது நெட்டிசன்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், டுவிட்டரின் லோகோ குறித்து இந்திய தென்மேற்கு ரயில்வே தரப்பில் கேள்வி எழுப்பியுள்ளது. அதாவது, ‘ரயிலின் கடைசி பெட்டியின் பின்புறத்தில் உள்ள ‘எக்ஸ்’ குறியீடு பற்றி தெரியுமா?’ என ரயிலின் கடைசி பெட்டியில் ‘எக்ஸ்’ என்ற குறியீடு இடம்பெறும் படத்தை பகிர்ந்து கேள்வி எழுப்பியுள்ளது.
இது டுவிட்டர் நிறுவனத்திற்கான கேள்வியா அல்லது இந்த எக்ஸ் குறியீடு பற்றி மற்றவர்கள் அறிந்துக்கொள்ளும்படியான கேள்வியா என்பது தெரியவில்லை. ஆனால், தென்மேற்கு ரயில்வேயின் இந்த பதிவு வைரலாகியுள்ளது.
ரயில் நிலையத்தை ரயில் தாண்டிவிட்டது என்பதை நிலையத்தில் உள்ள அதிகாரிகள் பார்த்து அறிந்து கொள்ள பயன்படுவதுதான் இந்த ‘எக்ஸ்’ குறியீடு. ரயில் நிலைய அதிகாரிகள் எளிதில் அறிந்து கொள்ள மஞ்சள், வெள்ளை நிறங்களில் ‘எக்ஸ்’ என்ற குறியீடு கடைசி பெட்டியில் இடம்பெறுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement