ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஜனாதிபதியுடன் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆன்ட்ரே பிராஞ்சுக்கும் (Marc-André Franch) இடையிலான சந்திப்பொன்று (24) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் அபிவிருத்திக்கான பல முக்கிய விடயங்கள் இங்கு கலந்துரையாடப்பட்டன.

இலங்கையின் நிதி தொடர்பான சவால்களை முறியடிப்பதற்கும் நிலைபெறுதகு அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கும் கடன் மறுசீரமைப்பிற்கும் ஐக்கிய நாடுகள் சபையின் ஒத்துழைப்பை வழங்குவதாக மார்க் ஆன்ட்ரே தெரிவித்தார்.

வடக்கு கிழக்கு அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கத் திட்டங்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளருக்கு கையளித்தார்.

வடக்கு, கிழக்கு மக்களின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதும் இனங்களுக்கிடையில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதுமே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும் எனவும், அதற்காக எதிர்காலத்தில் நாட்டில் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இலங்கையில் புதிய மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை செயற்படுத்துவதில் இலங்கையும் ஐக்கிய நாடுகள் சபையும் நெருக்கமாக செயற்படவும் இரு தரப்பினரும் இணக்கம் தெரிவித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.