திருச்சி வந்ததுமே மேஜர் சரவணன் நினைவுத்தூணுக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின்! இன்று மாலை முக்கிய மீட்டிங்

திருச்சி: திருச்சி வருகை புரிந்துள்ள முதல்வர் ஸ்டாலின், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். நாடாளுமன்ற தேர்தல் பணிகளை தொடங்கும் வகையில் இன்று திருச்சியில் நடைபெறும் திமுக பயிற்சிப் பாசறைக் கூட்டத்தில் 15 மாவட்டங்களைச் சேர்ந்த திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் மத்தியில் உரையாற்றுகிறார் முதல்வர் ஸ்டாலின்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் கிளம்பி 11 மணிக்கு மேல் திருச்சிக்கு வருகை தந்தார். அவருக்கு திருச்சி மாவட்ட திமுகவினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

முதல்வர் ஸ்டாலின் மரியாதை: திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள கார்கில் போரில் உயிர் நீத்த மேஜர் சரவணன் நினைவுத்தூண் மற்றும் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் முதல்வர் ஸ்டாலின். இதையடுத்து திருச்சி புரசக்குடியில் உள்ள மகளிர் உரிமைத்தொகைத் திட்டப் பதிவு முகாமை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட உள்ளார்.

பூத் கமிட்டி மீட்டிங்: திருச்சியில் இன்று மாலை திமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கும் முதல்வர் ஸ்டாலின், நாளை அரசு விழாக்களில் பங்கேற்கிறார். 2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக சார்பில் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்களை மண்டல வாரியாக சந்திக்க உள்ளார் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின். அதன்படி, முதற்கட்டமாக டெல்டா மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டம் திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ராம்ஜி நகரில் இன்று நடைபெறுகிறது.

CM Stalin starts lok sabha election works: meeting with 15 district booth commitee executives

இன்று காலை 10 மணிக்கு தொடங்கி மாலை வரை திருச்சியில் 15 மாவட்டங்களைச் சேர்ந்த திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சிப் பாசறைக் கூட்டம் நடைபெற உள்ளது.

மாலை முதல்வர் பங்கேற்பு: அரியலூர், பெரம்பலூர், கடலூர் கிழக்கு, கடலூர் மேற்கு, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் வடக்கு, தெற்கு, மத்திய, திருச்சி வடக்கு, தெற்கு, மத்திய, புதுக்கோட்டை வடக்கு, தெற்கு ஆகிய 15 தி.மு.க மாவட்டத்துக்கு உட்பட்ட 12,645 வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

இதற்காக 11 ஏக்கரில் சுமார் 13 ஆயிரம் பேர் அமரும் வகையில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டத்தில் இன்று மாலை 5 மணிக்கு தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார். இதைத்தொடர்ந்து அவர் மீண்டும் அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்து இரவு அங்கு ஓய்வெடுக்கிறார்.

நாளை அரசு விழாக்கள்: பின்னர் நாளை காலை 10 மணியளவில் திருச்சி கேர் கல்லூரி மைதானத்தில் நடைபெற உள்ள வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றுகிறார்.

பின்னர் அங்கிருந்து கார் மூலம் தஞ்சாவூருக்குப் புறப்பட்டு செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின், தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே மாநகராட்சியின் பன்னோக்கு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட 14 திட்டப் பணிகளை தொடங்கி வைக்கிறார். பின்னர் கார் மூலம் மீண்டும் திருச்சிக்கு வந்து அங்கிருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டுச் செல்கிறார்.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.