நம்பிக்கையில்லா தீர்மானம் என்றால் என்ன? மக்களவையில் விவாதமும், வாக்கெடுப்பும்… முழு விவரம்!

நடப்பு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் பரபரப்பிற்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது. இதன் ஹைலைட் மணிப்பூர் விவகாரம் தான். இதுபற்றி பிரதமர் மோடி விரிவாக பேச வேண்டும். தங்களையும் பேச அனுமதித்து நேரம் ஒதுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன.

நாடாளுமன்றத்தில் தொடர் அமளி

ஆனால் அதற்கான வாய்ப்பு அளிக்கப்படாததால் இரு அவைகளிலும் கூச்சல், குழப்பம், அமளி, ஒத்திவைப்பு என சென்று கொண்டிருக்கிறது. இந்த சூழலில் மக்களவையில் இன்று (ஜூலை 26) அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீசை
காங்கிரஸ்
வழங்கியுள்ளது. அக்கட்சி சார்பில் எம்.பி கவுரவ் கோகோய் நோட்டீஸ் அளிக்க, அதை சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

பிரதமர் மோடி பேச வேண்டும்

எனவே இதன்மீது வாக்கெடுப்பும், விவாதமும் விரைவில் நடைபெறவுள்ளன. இதன் இறுதியில் பிரதமர் மோடி பேசியே ஆக வேண்டும். அதுதான் நடைமுறை. இதை கணக்கில் வைத்து தான் எதிர்க்கட்சிகள் மேற்குறிப்பிட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளன. அதேசமயம் தனிப்பெரும்பான்மை உடன் விளங்கும் பாஜகவை வீழ்த்துவது சாத்தியமில்லை. இந்த இடத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்.

இது ஒரு நாடாளுமன்ற நடைமுறை. ஆளும் அரசின் பலத்தை சோதிக்கும் வகையில் எதிர்க்கட்சிகள் கொண்டு வரும் தீர்மானம்.

மக்களவையில் இருக்கும் எந்த ஒரு உறுப்பினரும் கொண்டு வரலாம். ஆனால் அந்த தீர்மானத்திற்கு அவையிலுள்ள உறுப்பினர்கள் குறைந்தது 50 பேர் ஆதரவு தெரிவித்திருக்க வேண்டும்.

எழுத்துப்பூர்வமாக சம்பந்தப்பட்ட உறுப்பினரின் கையெழுத்துடன் தீர்மான நோட்டீசை அளிக்க வேண்டும். இதை அவை நடைபெறும் எந்த ஒரு நாளிலும் மக்களவை சபாநாயகரிடம் அளிக்கலாம்.

இந்த தீர்மானத்தை ஏற்கலாமா? வேண்டாமா? என்பது பற்றி சபாநாயகர் முடிவு செய்வார். ஒருவேளை தீர்மானம் ஏற்கப்பட்டால், அதன்பிறகு எந்த தேதி மற்றும் நேரத்தில் விவாதிப்பது என முடிவு செய்யப்படும்.

மக்களவையில் தான் நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து விவாதிக்கப்படும். யார் தீர்மான நோட்டீஸ் அளித்தார்களோ, அவர் தான் முதலில் பேச அனுமதிக்கப்படுவார். அதற்கு அரசு தரப்பு உரிய பதிலளிக்கும். பின்னர் எதிர்க்கட்சிகள் ஒவ்வொன்றாக பேச வாய்ப்பளிக்கப்படும்.

மக்களவையில் உரிய விவாதத்திற்கு பின்னர், வாக்கெடுப்பு நடத்தப்படும். இதுதொடர்பான அறிவிப்பை சபாநாயகர் முறைப்படி அறிவிப்பார். அவையில் உள்ள பெரும்பாலான உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தால் தீர்மானம் நிறைவேற்றப்படும்.

தீர்மானம் நிறைவேறினால் அரசு உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்.

அரசு வெற்றி பெற்றால் தீர்மானம் தோல்வியை தழுவி விடும். அதன்பிறகு அரசுக்கு எந்த ஆபத்தும் இல்லை. ஆட்சி தொடரும்.

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 27 முறை நம்பிக்கையில்லா தீர்மானம் மக்களவையில் கொண்டு வரப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடத்தக்கவை இந்திரா காந்தி ஆட்சியில் 15 முறை, லால் பகதூர் சாஸ்திரி மற்றும் பிவி நரசிம்ம ராவ் ஆட்சியில் தலா 3 முறை, வாஜ்பாய் ஆட்சியில் ஒருமுறை,

மோடி ஆட்சிக்கு எதிராக 2018ல் ஒருமுறை கொண்டு வரப்பட்டது. இதில் ஏப்ரல் 1999ல் வாஜ்பாய் ஆட்சிக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் 269, 270 என ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று பாஜக ஆட்சி கவிழ்ந்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.