பா.ஜ.க-வின் இரட்டை இன்ஜின் ஆட்சி நடைபெறும் மணிப்பூரில், கலவரத்தின்போது பழங்குடியல்லாத மைதேயி சமூக ஆண்கள் குழுவால், பழங்குடியின குக்கி பெண்கள் இருவர் நிர்வாணக்கொடுமை, கூட்டு பாலியல் வன்கொடுமைக்குள்ளான சம்பவம் கடந்த வாரம் நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நாட்டுக்கே தலைகுனிவை ஏற்படுத்திய இத்தகைய சம்பவம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தவேண்டும், பிரதமர் அறிக்கை வெளியிட வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்திவருகின்றன.
ஆனால், 4 நாள்களாக விவாதம் நடத்தப்படாமலே நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, பா.ஜ.க மத்திய அரசுக்கு எதிராக மக்களவையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரத் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது மற்றுமொரு பழங்குடியினப் பெண், மே 15-ம் தேதியன்று தானும் மூன்று பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்குள்ளானதாகக் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தனக்கு நேர்ந்த கொடுமை தொடர்பாகத் தனியார் ஊடகத்திடம் விவரித்த பாதிக்கபட்டப் 19 வயது பழங்குடியினப் பெண், “கலவரக் கும்பலிடமிருந்து தப்பிக்க ஏ.டி.எம்-க்குள் சென்றேன். ஆனால், நான்கு பேர் வெள்ளை நிற பொலேரோவில் வந்து கடத்திச் சென்றனர். அவர்களில் டிரைவரைத் தவிர, அவர்களில் மூன்று பேர் என்னைக் கூட்டு பாலியல் வன்கொடுமை. பின்னர் ஒரு மலைக்கு நான் அழைத்துச் செல்லப்பட்டேன். அங்கு அவர்கள் என்னைச் சித்திரவதை செய்தனர். இரவு முழுவதும் சாப்பிட எதுவும் கொடுக்காமல், என்னை எந்த அளவுக்கு கொடுமைப்படுத்த முடியுமோ அந்த அளவுக்குக் கொடுமைப்படுத்தினர். குடிக்கத் தண்ணீர் கூட கொடுக்கவில்லை.
அடுத்த நாள் காலை கழிப்பறைக்குச் செல்ல வேண்டும் என்று கேட்டபோது. அவர்கள் என்னை அவிழ்த்து விட்டனர். அப்போது தான் என்னைச் சுற்றி நடக்கிறது என்பதைப் பார்க்க முயன்றேன். பிறகு அங்கிருந்து தப்பிக்க முடிவுசெய்து ஒருவழியாகத் தப்பித்துவிட்டேன். அதன்பிறகு மே 21-ம் தேதிதான் போலீஸில் புகாரளிக்க முடிந்தது” என்றார். தப்பிக்கும்போது காய்கறி குவியலில் மறைத்திருந்த அந்தப் பழங்குடிப் பெண்ணை ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் பாதுகாப்பாக மீட்டார். அதன்பிறகு அந்தப் பெண் சொந்த ஊரை அடைந்தார்.
அதையடுத்து அவர், பக்கத்து மாநிலமான நாகாலாந்தில் ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக, 21-ம் தேதி காங்போக்பி காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த வழக்கிலும் சரியான ஆதாரங்கள் எதுவும் இல்லாததால், குற்றவாளிகளை அடையாளம் காணமுடியாமல் கைதுசெய்யப்படவில்லை என்றே வாசகமே தொடர்கிறது.
இருப்பினும் இதில் விசாரணை நடைபெற்றுவருவதாகக் கூறும் போலீஸ் தரப்பு, `பாதிக்கபட்டப் பெண்ணின் குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் இல்லாதது விசாரணைக்கு இடையூறாக இருக்கிறது. ஆதாரம் இல்லாததால் இத்தகையப் பெண்களுக்கு நீதி கிடைப்பது சவாலான விஷயமாக மாறியுள்ளது’ என்று கூறுகிறது.
முன்னதாக மணிப்பூர் நிர்வாணக்கொடுமைத் தொடர்பாக வீடியோ வெளியாக இரண்டு நாளில், `கலவரத்தில் பழங்குடியினப் பெண்கள் இன்னும் பலர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருக்கின்றனர்’ என்று குக்கி இன எம்.எல்.ஏ-க்கள் 10 பேர் கூட்டறிக்கை வெளியிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.