- அதிக வேகத்தால் ஏற்படும் விபத்துகளைத் தடுப்பதற்கான வேகக் கட்டுப்பாட்டுக் கொள்கை.
- போதைப்பொருள் பாவனையுடன் வாகனம் செலுத்தும் சாரதிகளை கண்டுபிடிக்கத் திட்டம் – போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லஸந்த அழகியவன்ன.
வினைத்திறனான மற்றும் தரமான போக்குவரத்து சேவையை முன்னெடுப்பதற்காக 50 மின்சார பேரூந்துகளை பாவனையில் ஈடுபடுத்தும் “ஈ-பேருந்து” முன்னோடித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார்.
லக்திவ பொறியியல் நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் இத்திட்டத்திற்கு ஏற்கனவே அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (25) நடைபெற்ற ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கும்போதே போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லஸந்த அழகியவன்ன இதனைத் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் லஸந்த அழகியவன்ன,
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பிரகாரம், நவீன தொழிநுட்பத்தை பயன்படுத்தி, வினைத்திறன் மிக்க போக்குவரத்து சேவையினை பொதுமக்களுக்கு வழங்குவதே எமது பிரதான நோக்கமாகும் என்றும், அதற்காக பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
முறையாக பயன்படுத்தப்படாமல் இருக்கும் லக்திவ பொறியியல் நிறுவனத்தின் வளங்களின் மூலம் கூடிய பயனைப் பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் அதனை செயற்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் இணைந்து இங்கு மின்சார பேரூந்துகளை தயாரிப்பதற்கு தற்போது அமைச்சரவைத் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளதுடன், இதன்படி 50 பேரூந்துகளுடன் மாதிரி வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதன் வெற்றியுடன் எமது நாட்டில் மின்சார பேரூந்துகளின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் இத்திட்டத்தை விரிவுபடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம், தற்போது நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மக்கள் தமது கட்டணங்களை பண அட்டை மூலம் செலுத்தக் கூடிய வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளதாகவும் இதன் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் இலகுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
பழமையான மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் செய்து புதிய சட்டத்தை முன்வைக்க அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அதற்காக 13 குழுக்கள் நியமிக்கப்பட்டு, போக்குவரத்து சட்டத்தில் திருத்தம் செய்யத் தேவையான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், புதிய சட்ட வரைவு தயாரிக்கப்பட்டதன் பின்னர் அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
வாகன இறக்குமதியின்போது இடம்பெறும் பல்வேறு மோசடிகளைத் தவிர்க்க “ஈ மோட்டரிங்” என்ற வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளதுடன், நவீன தொழிநுட்பத்தை பயன்படுத்தி வாகனத்தை இறக்குமதி செய்யும் போதே அது தொடர்பான தரவுகள் பதிவு செய்யப்படக்கூடிய வகையில், இந்த “ஈ-மோட்டரிங்” வேலைத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதுடன், இதன் ஊடாக வாகன இறக்குமதி மூலம் நாட்டுக்கு கிடைக்க வேண்டிய வரி வருமானம் முழுமையாக கிடைக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பிரகாரம், கடந்த காலங்களில் மக்களினால் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்த செவிப்புலன் குறைபாடுடையவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் பணி, விசேட அமைச்சரவை அங்கீகாரத்துடன் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டது. இதன் ஆரம்ப கட்ட நடவடிக்கையாக கம்பஹா மாவட்டத்தில் சுமார் 100 பேர் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு அவசியமான பயிற்சிகள் வழங்கப்பட்டதுடன், வாகனங்களுக்கு தனியான இலச்சினையை அறிமுகப்படுத்தி, தற்போது செவிப்புலன் குறைபாடுடைய 43 பேருக்கு சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், அண்மையில் ஜனாதிபதி தலைமையில் ஐந்து பேருக்கு அடையாள ரீதியில் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், விபத்துகளை தடுக்கும் வகையில் தகைமை இழப்பு புள்ளி செயல்முறையை நடைமுறைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், வீதிகளில் இடம்பெறும் தவறுகளுக்கு குறித்த வீதியிலே அபராதம் அறவிடப்படும் முறையை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதற்கான அடிப்படைப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.
இதுவரை நமது நாட்டில் மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களைக் கண்டறியும் செயற்பாடு மாத்திரமே நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் தற்போது போதைப்பொருள் பாவனையுடன் வாகனங்களை செலுத்தும் சாரதிகளை இணங்கண்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டிய அமைச்சர், இதன் ஆரம்ப கட்ட நடவடிக்கை மேல்மாகாணத்தில் செயற்படுத்தப்பட்டதாகவும் அடுத்த ஆண்டு இத்திட்டம் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
சாரதிகளுக்கு விபத்துகளின் போது செயற்படுத்த வேண்டிய முதலுதவிப் பணிகள் தொடர்பில் தெளிவூட்ட பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்காலத்தில் சாரதி அனுமதிப்பத்திர பரீட்சையின்போது முதலுதவி தொடர்பான வினாக்களை உள்ளடக்க உத்தேசித்துள்ளதாகவும் குறிப்பாக செஞ்சிலுவை சங்கத்துடன் இணைந்து இதற்கான பணிகளை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.