தமிழ்நாட்டில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் சென்று மத்திய பா.ஜ.க அரசின் ஒன்பது ஆண்டு கால சாதனைகளை மக்களிடம் எடுத்துரைக்க நடைப்பயணத்தை இன்று தொடங்கயிருக்கிறார் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை. ‘என் மண், என் மக்கள்’ என்ற தலைப்பில் ராமேஸ்வரத்திலிருந்து நடைப்பயணத்தை இன்று (ஜூலை 28) அவர் தொடங்கயிருக்கிறார்.
அண்ணாமலை மேற்கொள்ளும் நடைப்பயணத்தின் தொடக்க நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்றார். எனவே, அண்ணாமலையின் நடைப்பயணத்துக்கு ஒரு முக்கியத்துவம் கிடைத்திருக்கிறது. இதேபோல, இந்த நடைப்பயணத்தின்போது மத்திய அமைச்சர்கள் பலரும் கலந்துகொள்வார்கள் என்று அண்ணாமலை கூறியிருக்கிறார்.
நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நெருங்கும் நேரத்தில், தமிழ்நாட்டில் பா.ஜ.க-வை பலப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த நடைப்பயணத்தை அண்ணாமலை மேற்கொள்கிறார். நடைப்பயணத்தின் தொடக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு அ.தி.மு.க உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுக்கு அண்ணாமலை வேண்டுகோள் விடுத்திருந்தார்.
ஆனால், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் இதில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. ஏற்கெனவே, அண்ணாமலைக்கும் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் ஆகாது. ஏற்கெனவே, இவர்கள் இருவருக்கும் இடையே கடுமையான வார்த்தைப்போர் நடந்திருக்கிறது. பா.ஜ.க-வின் டெல்லித் தலைமையுடன் மட்டுமே எடப்பாடி பழனிசாமி சுமூகமான உறவை வைத்திருக்கிறார். இந்த நிலையில், அண்ணாமலையின் நடைப்பயணத் தொடக்க நிகழ்ச்சிக்கு எடப்பாடி பழனிசாமி வரவில்லை. சில நிர்வாகிகளை மட்டும் அவர் அனுப்பிவைத்திருக்கிறார்.
பா.ஜ.க-வின் கூட்டணி கட்சியான பா.ம.க-வின் தலைவர் அன்புமணியும் அங்கு செல்லவில்லை. சில சிறிய கட்சிகளின் நிர்வாகிகள் மட்டுமே ராமேஸ்வரம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கிறார்கள்.
எதிர்க்கட்சியினரோ, அண்ணாமலையின் நடைப்பயணத்தை விமர்சித்துவருகிறார்கள். தி.மு.க-வைச் சேர்ந்த அமைச்சர் சேகர் பாபு, ‘உடலை சீராக வைத்துக்கொள்வதற்காக, மருத்துவரின் ஆலோசனைப்படி நடைப்பயணத்தை அவர் மேற்கொள்கிறாரோ என்று தெரியவில்லை. நடைப்பயணம் மட்டுமல்ல, எத்தனை குட்டிக்கரணம் அடித்தாலும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரி உள்பட 40 இடங்களிலும் தி.மு.க தலைமையிலான கூட்டணிதான் வெற்றிபெற்றும்’ என்றார்.
அதேபோன்ற ஒரு விமர்சனத்தைத்தான் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானும் கூறியிருக்கிறார். ‘அண்ணாமலை, ஐ.பி.எஸ் பயிற்சியின்போது நடந்திருப்பார்.. ஓடியிருப்பார். இப்போது பயிற்சி இல்லாத காரணத்தால், உடம்பை கொஞ்சம் ஃபிட் ஆக்கிக்கொள்ளலாம் என்ற நினைத்து நடைப்பயணம் செல்கிறார். திராவிட மாடல், குஜராத் மாடல் ஆகியவற்றை போல, நடைப்பயணம் செல்வதும் மிகவும் பழைய மாடல். ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோகூட நடைப்பயணம் சென்றார். ராகுல் காந்தியும் நடைப்பயணம் சென்றார். வாக்கிங் போவதாக இருந்தால் கடற்கரையிலோ, பூங்காவிலோ செல்லுங்கள். சாலையில் நடைப்பயணம் செல்வது தேவையற்றது.
நடைப்பயணத்தில் அண்ணமாலை என்ன சொல்லப்போகிறார். அவர் சொல்ல என்ன இருக்கிறது?கடந்த ஒன்பது ஆண்டுகளாக மத்தியில் உங்கள் ஆட்சிதான் நடைபெறுகிறது. மோடி பிரதமராக இருக்கிறார். அவர், 95 விழுக்காடு இந்தியாவை தனியாரிடம் விற்றுவிட்டார். மீதியிருக்கும் ஐந்து விழுக்காடு இந்தியாவையும் விற்றுவிட வேண்டும் என்று அடுத்த முறையும் வர முயற்சி செய்கிறார்” என்றார் சீமான்
அண்ணாமலையின் நடைப்பயணத்தை இடதுசாரிகளும் கடுமையாக விமர்சிக்கிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் த.லெனின், “அண்ணாமலையின் நடைப்பயணத்தின்போது மக்களின் கருத்துக்களைக் கேட்பதற்காக புகார் பெட்டி வைக்கப்போகிறார்களாம். பெட்ரோல் விலை, டீசல் விலை, உணவுப்பொருட்களின் விலை என விலைவாசி அனைத்தும் பல மடங்கு உயர்ந்திருக்கிறது.
அதற்கு மத்தியில் இருக்கும் பா.ஜ.க தலைமையிலான மோடி அரசுதான் காரணம். அந்த புகார் பெட்டியில் விலைவாசி பற்றித்தான் மக்கள் புகார்களை எழுதிப்போடுவார்கள். மோடி அரசுக்கு எதிரான தங்களின் அதிருப்தியையும், கோபத்தையும் அந்தப் பெட்டியில் மக்கள் எழுதிப்போடுவார்கள். மேலும், பா.ஜ.க தொடர்பான பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பான புகார்கள் அந்தப் பெட்டியில் குவிவதற்கு வாய்ப்பு இருக்கிறது” என்றார் த.லெனின்.
மேலும் த.லெனின் கூறுகையில், ‘மக்கள் முன்னிலையிலோ, பத்திரிகையாளர்கள் முன்னிலையிலோ தான் அந்த பெட்டியை பா.ஜ.க-வினர் திறக்க வேண்டும். அப்போது, பா.ஜ.க மீது மக்கள் எந்தளவுக்கு அதிருப்தியோடும் கோபத்தோடும் இருக்கிறார்கள் என்பது தெரியவரும்’ என்றார்.