தென்னைநார் தொழில் நிறுவனங்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க உயர்மட்ட நிபுணர் குழு: முதல்வர் ஸ்டாலின் 

சென்னை: காயர் பித் மற்றும் பிற தென்னைநார் சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனங்களின் கோரிக்கைகளை பரிசீலித்து அரசுக்கு பரிந்துரைக்க உயர்மட்ட நிபுணர் குழு அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காயர் பித் மற்றும் பிற தென்னை நார் சம்பந்தப்பட்ட தொழில்களை வெள்ளை வகையிலிருந்து ஆரஞ்சு வகையாக மறுவகைப்படுத்தியது தொடர்பாக பல்வேறு தென்னை நார் தொழில் சார்ந்த சங்கங்களின் கோரிக்கைகள் அரசுக்கு பெறப்பட்டுள்ளன.

தமிழகத்திலுள்ள தென்னை சார் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியிலும் நீடித்த நிலைத்தன்மையினை உறுதி செய்வதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ள தமிழக அரசு ‘தமிழ் நாடு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனம்’ என்ற நிறுவனம் ஒன்றினை துவக்கி மதிப்புக் கூட்டப்பட்டுள்ள பொருட்கள் உற்பத்தியினை அதிகரிக்கவும் உள்ளூர் மற்றும் ஏற்றுமதி சந்தை வாய்ப்பினை அதிகரிக்கவும் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் நம் மாநிலத்தில் உள்ள தென்னை விவசாயிகளின் பொருளாதாரம் மேம்படும்.

தமிழகத்தில் சுமார் நான்காயிரத்துக்கும் மேற்பட்ட தென்னை நார் மற்றும் காயர் பித் உள்ளிட்ட தென்னை சார் தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. பெருமளவில் பெண்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்குவதுடன் மொத்தத்தில் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட கிராமப்புற வேலைவாய்ப்புகளை வழங்கி வரும் இந்நிறுவனங்களின் கோரிக்கையை தமிழக அரசு மிகுந்த கனிவுடன் பரிசீலித்து வருகிறது.

இந்நிலையில் இந்த கோரிக்கை குறித்து அனைத்து தரப்பினருடனும் கலந்தாலோசித்து, இப்பொருள் குறித்து விரிவாக ஆராய்ந்து, அரசுக்கு பரிந்துரைக்க உயர்மட்ட நிபுணர் குழுவை அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இம்முயற்சி சுற்றுச்சூழலுக்கு உகந்தவகையிலும் அதே சமயம் இந்நிறுவனங்கள் நிலைத்தன்மையுடன் இயங்கிடவும் வழி வகுக்கும்” என்று முதல்வர் கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.