நடைமுறை சாத்தியமான சிந்தனையாளனை இழந்து விட்டோம் – அமைச்சர் டக்ளஸ் 

அச்சுவேலி “லாலா சோப்” தொழிலக ஸ்தாபகர் பொன்னு வன்னியசிங்கம் உயிரிழப்புச் செய்தி அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

பல்வேறு அவலங்களையும் கடந்து பயணித்துக் கொண்டிருக்கும் எமது சமூகத்தில் வாழ்ந்தவர்களில் லாலா ஐயா என்று வாஞ்சையுடன் எம்மால் அழைக்கப்பட்ட அமரர் வன்னியசிங்கம் அவர்களும் முக்கியமானவர்.

காலத்தின் தேவையுணர்ந்து நடைமுறைச் சாத்தியமான வழியில் சிந்தித்து, அதன் வழியிலேயே தன்னுடைய வர்த்தக நடவடிக்கைகளையும், ஏனைய செயற்பாடுகளையும் முன்னெடுத்த ஒருவரை எமது சமூகம் இன்று இழந்துள்ளது.

அந்த வகையில், 90 களின் இறுதிப் பகுதியில் நடைமுறைச் சாத்தியமான – மக்கள் நலன் சார்ந்த அரசியல் பணிகளை நாம் யாழ் குடாநாட்டில் மீண்டும் ஆரம்பித்த வேளையில் எம்மோடு இணைந்து பல்வேறு மக்கள் நலச் செயற்பாடுகளில் ஈடுபட்டது மாத்திரமல்லாமல், எமது செயற்பாடுகளை உற்சாகப்படுத்திய முக்கியமானவர்களில் ஒருவராக அமரர் வன்னியசிங்கம் அவர்கள் விளங்கியிருந்தார்.

இதனால் அன்னார் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்க வேண்டி ஏற்பட்ட போதிலும் அவற்றை துணிச்சலோடு எதிர்கொண்டிருந்தார்.

இவ்வாறானவர்களின் இழப்பு என்பது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு மாத்திரமன்றி எமது சமூகத்திற்கும் ஈடு செய்யப் முடியாத இழப்பாக அமைந்து விடுகின்றது.

இந்நிலையில், அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.