சென்னை: ஜெயிலர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்தில், ரஜினிகாந்துடன் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், யோகி பாபு, வசந்த் ரவி, விநாயகன், தமன்னா ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்தில் இருந்து முதல் சிங்கிள் பாடலான காவாலா, இரண்டாவது சிங்கிலான ஹுக்கும் மற்றும் மூன்றாவது சிங்கிள் பாடலான ஜூஜூபி ஆகிய பாடல்கள் வெளியாக உள்ளன.
ஜெயிலர் இசைவெளியீட்டு விழா: இந்நிலையில், ஜெயிலர் திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா நேரு விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் விஜய்யின் அரபிக்குத்து பாடல் ஒளிபரப்பட்டது அதற்கு நடனக் கலைஞர்கள் ஆடிய ஆட்டத்திற்கு ரசிகர்கள் மத்தியில் இருந்து வீசில் பறந்தது. இணையத்தில் ரஜினி மற்றும் விஜய் ரசிகர்கள் இடையே மோதல் நடந்து வரும் நிலையில் விஜய் நடித்த பீஸ்ட் படத்தில் இருந்து பாடல் ஒளிபரப்பானது பரபரப்பாக பேசப்பட்டது.
ரஜினி மாஸ் என்ட்ரி: இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்த ரஜினிகாந்த் கருப்பு சட்டை அணிந்து கொண்டு கலாநிதி மாறனின் கையை கோர்த்த படி சும்மா மாஸ் என்டரி கொடுத்திருந்தார். அவர் அரங்கத்திற்குள் என்ட்ரியான போது சிங்க நடைபோட்டு சிகரத்தில் ஏறு பாடல் ஒளிபரப்பானது. ரஜினி அரங்கத்திற்குள் வந்ததும் அங்கு அமர்ந்து இருந்த நெல்சன் மற்றும் அனிருத்தை கட்டித்தழுவினார்.
தெறிக்க விட்ட அனிருத்: ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் அனிருத் ஓபனிங் பாடலாக ஹூக்கும் பாடலை லைவாக பாடி அசத்தினார். மேலும், நடிகை தமன்னா காவாலா பாடலுக்கு நடனமாடினார். அந்த புகைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தங்களது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த விழாவில் ரஜினியின் சகோதரர் சத்யநாராயணன், ரஜினிகாந்தின் பேரன்கள்,இயக்குநர் நெல்சன், அனிருத், தமன்னா, யோகி பாபு,விக்னேஷ் சிவன், ரம்யா கிருஷ்ணன், ஜாக்கி ஷெராப், கன்னட நடிகர் சிவா ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.