புதுடெல்லி: மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, உத்தரப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்து வருவதால் பல பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில வாரங்களாக மழை பெய்து வருகிறது. மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் இன்றும் பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது. சில பகுதிகளில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இதனிடையே, மும்பையில், கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தற்போது பெய்துள்ள மழை காரணமாக மும்பை மாநகரின் பல வீதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால், வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகன ஓட்டிகள் பலர் தங்கள் வாகனங்களை தள்ளிக்கொண்டு செல்வதைப் பார்க்க முடிகிறது. ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. குறைந்த எண்ணிக்கையில் ரயில்கள் இயக்கப்படுவதால், ரயில் நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. மும்பைக்கு குடிநீர் வழங்கும் 7 ஏரிகளில் 4 ஏரிகள் நிரம்பிவிட்டதாகவும், சராசரியாக ஏரிகளில் நீர் இருப்பு 68 சதவீதமாக உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குஜராத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. நவ்சாரி பகுதியில் பெய்த கன மழை காரணமாக வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துவிட்டது. இதனால், மக்கள் மிகுந்த சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தபடி, புதுடெல்லியின் பல பகுதிகளில் கனமழை முதல் மிதமான மழை பெய்தது. குறைந்தபட்ச வெப்பநிலை 26.6 டிகிரி செல்சியஸாக இருந்தது.
ஜம்மு காஷ்மீரில் கனமழை காரணமாக ரேசி மாவட்டத்தில் புதால் மஹோர் சாலையில் மிகப் பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. மலை ஒன்று பள்ளத்தாக்கை நோக்கி அப்படியே சரிந்து செல்லும் காட்சிகளைக் கொண்ட வீடியோ ஒன்று வைரலாகி உள்ளது.