சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல் டிஆர்பியில் கலக்கிக் கொண்டிருக்கிறது.
இதில் ஆதிகுணசேகரன் கேரக்டரில் நடித்துள்ள மாரிமுத்துவுக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது.
ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ள மாரிமுத்துவுக்கு, எதிர்நீச்சல் சீரியல் சிறப்பான கம்பேக் கொடுத்துள்ளது.
இந்நிலையில், இவர் ஏஆர் ரஹ்மானை பாராட்டியதால் நடிகர் ராஜ்கிரணால் விரட்டிவிடப்பட்ட சம்பவம் குறித்து தற்போது தெரியவந்துள்ளது.
மாரிமுத்துவை விரட்டிவிட்ட ராஜ்கிரண்:சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த சீரியலில் நடித்து வரும் அனைத்து கேரக்டர்களுக்கும் மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக வில்லனாக நடித்துள்ள மாரிமுத்து, ரியல் ஆதி குணசேகரனாகவே மிரட்டி வருகிறார். இதுவரை ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ள மாரிமுத்துவுக்கு, எதிர்நீச்சல் சீரியல் சிறப்பான கம்பேக் கொடுத்துள்ளது.
வசந்த், எஸ்ஜே. சூர்யா ஆகியோரிடம் உதவி இயக்குநராக வேலை பார்த்துள்ள மாரிமுத்து, முதலில் நடிகர் ராஜ்கிரண் ஆபிஸில் தான் வேலை பார்த்துள்ளார். ராஜ்கிரண் உச்சத்தில் இருந்த நேரம் அது, என்ன பெத்த ராசாவே, என் ராசாவின் மனசிலே, அரண்மனை கிளி என அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்களில் நடித்து கோடம்பாகத்தையே அதிர வைத்துக் கொண்டிருந்தார்.
அதேபோல், கிராமத்துப் பின்னணியில் உருவான படங்களில் மட்டுமே நடித்துவந்த ராஜ்கிரணுக்கு, இளையராஜாவின் பாடல்கள் இன்னும் பெரிய பலமாக அமைந்தது. ராஜாவின் தீவிர ரசிகராகவும் வலம் வந்துள்ளார் ராஜ்கிரண். ஆனால் இது தெரியாமல் தான் மாரிமுத்து வாயை கொடுத்து மாட்டிக் கொண்டாராம். அதாவது 1992ம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய ரோஜா திரைப்படம் வெளியானது.
இந்தப் படத்தில் தான் ஏஆர் ரஹ்மான் இசையமைப்பாளராக அறிமுகமானார். ரோஜா படத்தின் பாடல்கள் பட்டித் தொட்டியெங்கும் பட்டையைக் கிளப்ப, பலரும் ஏஆர் ரஹ்மானை வெகுவாக பாராட்டி வந்தனர். அப்படித்தான் மாரிமுத்துவும் நடிகர் ராஜ்கிரணின் ஆபிஸில் எப்போதும் ஏஆர் ரஹ்மான் குறித்து ரொம்பவே புகழ்ந்து பேசியுள்ளார். ரோஜா படத்தின் பாடல்கள் குறித்தும் அதிகம் பாராட்டியது ராஜ்கிரணுக்கு தெரியவந்துள்ளது.
இளையராஜாவின் தீவிர ரசிகரான ராஜ்கிரணுக்கு இந்த விஷயம் தெரியவர, மாரிமுத்துவை ஆபிஸில் இருந்து விரட்டி விட்டாராம். கடைசியில் ஏஆர் ரஹ்மானை புகழ்ந்து பேசியதால் ராஜ்கிரண் ஆபிஸில் இருந்து விரட்டப்பட்ட மாரிமுத்து, அதன்பின்னர் உதவி இயக்குநராக பணிபுரிந்துள்ளார். இதனை சமீபத்திய பேட்டியொன்றில் கூறியுள்ளார் மாரிமுத்து.