ரஜினியின் ‘ஜெயிலர்’ இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடக்கிறது. விழாவிற்கு படத்தில் நடித்த மோகன்லால், சிவராஜ் குமார், சுனில், ஜாக்கி ஷெராப் என பான் இண்டியா நட்சத்திரங்கள் வரிசை கட்டுகிறார்கள்.
படத்தின் லிரிக் வீடியோக்கள் வெளியாகி, வரவேற்பைப் பெற்ற நிலையில், ரஜினி – நெல்சன் கூட்டணி உருவான எப்படி என்பதை பார்ப்போம். பிரமாண்ட தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸின் ‘எந்திரன்’, ‘பேட்ட’, ‘அண்ணாத்த’வுக்கு படங்களுக்குப் பிறகு மீண்டும் அதனுடன் ரஜினி இணைந்திருக்கும் படம் ‘ஜெயிலர்’. விஜய்யை வைத்து ‘பீஸ்ட்’டை கொடுத்த நெல்சன் திலீப்குமார், இயக்கி இருக்கிறார். படத்தில் ரஜினி, தமன்னா தவிர ஜாக்கி ஃஷெராப், மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யாகிருஷ்ணன், சுனில், விநாயகன், மிர்ணாமேனன், யோகிபாபு, கிஷோர், வசந்த் ரவி, கிஷோர் எனப் பலரும் நடித்துள்ளனர்.
`டாக்டர்’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்த விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். நெல்சனின் ஆஸ்தான இசையமைப்பாளர் அனிருத், இசையத்துள்ளார்.
சரி விஷயத்துக்கு வருவோம். ‘ஜெயிலர்’ படத்திற்கு முன்னர் ரஜினி நடித்த ‘அண்ணாத்த’ படத்துக்கு விமர்சன ரீதியாக இருவேறு கருத்துக்கள் உலாவியது. ஆகையால் ஒரு கட்டத்தில் ரஜினியே படத்தை மனம் திறந்து பாராட்டியதோடு, அதில் பணிபுரிந்த இயக்குநர் சிவாவிலிருந்து டெக்னீஷியன்கள் டீம் வரை அனைவருக்கும் தங்கச்சங்கிலி பரிசளித்து அணிவித்து மகிழ்ந்தார். ‘கலாநிதி மாறன் சாரும் ஹேப்பி’ என ஒரு மையமாக சொன்னார். அந்த மகிழ்ச்சியின் வெளிப்பாடுதான் ‘ஜெயிலர்’ உருவாகக் காரணம்.
ரஜினியின் பிடித்த படங்கள் வரிசையில் நெல்சனின் ‘டாக்டர்’ படமும் உண்டு. படத்தை இரண்டு முறை பார்த்து ரசித்திருக்கிறார். ‘அண்ணாத்த’ முடித்தவுடன் இயக்குநர்கள் அ.வினோத், பாண்டிராஜ், வெற்றிமாறன் என பலரிடம் கதைகள் கேட்டு வந்தார். அந்த சூழலில்தான் நெல்சன் விஜய்யின் ‘பீஸ்ட்’டை இயக்க ஒப்பந்தமானார். அதன் நூறாவது நாள் படப்பிடிப்பு நிறைவடைந்த போது, அந்த இடைவெளியில் நெல்சனைக் கூப்பிட்டு ‘கதை இருக்கிறதா?’ என ரஜினி கேட்டிருக்கிறார். நெல்சனோ உடனடியாக ஒரு லைனை சொல்ல, அது ரஜினிக்கும் பிடித்து விட, அதன்பின்தான் தயாரிப்பு நிறுவனம் முடிவானதாகச் சொல்கிறார்கள். ரஜினியின் படத்தில் நெல்சன் கமிட் ஆன அடுத்த நொடியே, விஜய்யிடம் இதுபற்றி தெரிவித்திருக்கிறார் நெல்சன். விஜய்யும் உடனே மகிழ்ந்து ‘கலக்கு நெல்சா’ என மனம் திறந்து வாழ்த்தினார் விஜய்.
அதன் பின் கோடம்பாக்கமே அடுத்து ரஜினியின் படத்தை நெல்சன் இயக்குகிறார் என பேச்சு கிளம்பியது. அதன் பின், ‘பீஸ்ட்’டுக்கு எதிர்பார்த்த வரவேற்பு இல்லை என்று முடிவாகியதும், ரஜினி படத்தில் இருந்து நெல்சனை நீக்கி விடுவர்கள் என்றும், ‘தர்பார்’, ‘அண்ணாத்த’ என ரஜினியும் அடுத்தடுத்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத படங்கள் இருந்ததால், கண்டிப்பாக அவருக்கு ஒரு வெற்றி தேவை அதனால், இயக்குநரை மாற்றிவிடுவார்கள் என்பது போன்ற பேச்சுக்கள் ஏகத்துக்கும் எழுந்தன. இன்னும் ஒருபடி மேலே, ‘ஜெயிலர்’ கதை விவாதத்தில் கே.எஸ்.ரவிக்குமார் உள்பட ரஜினியை ஏற்கெனவே இயக்கியவர்களின் பங்களிப்பு இருக்கிறது என்பது போன்ற பேச்சுகளும் எழுந்தன. ஆனால், பட உலகில் கிளம்பிய தகவல்களைப் பொய்யாக்கும் விதத்தில், நெல்சனே, இயக்கினார். படப்பிடிப்பு ஆரம்பித்ததில் இருந்து மோகன்லால், தமன்னா என நாளொரு ஸ்பாட்டும், பொழுதொரு நட்சத்திரமுமாய், ‘வெல்கம் ஆன் த போர்டு’ ஆனார்கள்.
நெல்சனின் வொர்க்கிங் ஸ்டைல் ரஜினிக்கு புதுசு. முதல் ரெண்டு நாள் படப்பிடிப்பில் யூனிட்டில் கலகலப்பாக அத்தனை பேரும் புன்னகை பொங்க வேலை செய்ததில் ரஜினியே ஆச்சரியமாகிவிட்டார். வேலையும் சரியா போகுது. நல்ல டீமாகவும் இருக்கே என சந்தோஷமான ரஜினியின் குட்புக்கில் நெல்சனும் இணைந்துவிட்டார். இப்போது முழுப்படமும் முடிந்து சென்ஸார் ஆகிவிட்டது. இன்று இசைவெளியீடும் கோலாகலமாக நடக்கிறது.! வெளியான பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிற நிலையில், நெல்சன், ரஜினி இருவருக்குமே முக்கியமானதொரு படமாக ஜெயிலர் இருக்கிறது. அதன் காரணமாகவே படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்திருக்கிறது.