அண்ணாமலையின் `என் மண், என் மக்கள்’ பாதயாத்திரை – ராமேஸ்வரத்தில் தொடங்கி வைக்கிறார் அமித் ஷா!
பிரதமர் மோடி வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் ராமநாதபுரத்தில் போட்டியிடப்போவதாக தகவல் பரவி வரும் சூழலில், தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, `என் மண், என் மக்கள்’ என்ற முழக்கத்துடன் ராமேஸ்வரத்தில் தொடங்கி தமிழகம் முழுவதும் பாதயாத்திரை மேற்கொள்ளவிருக்கிறார். இந்தப் பாதயாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று தொடங்கிவைக்கிறார். இதற்காக ராமேஸ்வரம் புதிய பேருந்து நிலையம் அருகே புதிய நாடாளுமன்றக் கட்டட வடிவில் பிரமாண்டமாக விழா மேடை அமைக்கப்பட்டிருக்கிறது. வருகிற நாடாளுமன்றத் தேர்தலைக் குறிவைத்து மேடை அலங்கரிக்கப்பட்டிருப்பதாக பா.ஜ.க-வினர் கூறிவருகின்றனர். இதில் அ.தி.மு.க., த.மா.க., ஐ.ஜே.கே உள்ளிட்ட பா.ஜ.க கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும் கலந்துகொள்கின்றனர்.
விழாவில் கலந்துகொள்வதோடு ராமேஸ்வரத்தில் இரண்டு நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும் அமித் ஷா திட்டமிட்டிருக்கிறார். அதன்படி இன்று 12:30 மணிக்கு டெல்லியிலிருந்து புறப்பட்டு, மாலை மதுரை வரும் அவர், அங்கிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் வருகிறார். அங்கிருந்து காரில் ராமேஸ்வரத்திலுள்ள தனியார் சொகுசு விடுதியில் ஓய்வெடுக்கிறார். மாலை 5:45 மணிக்கு விழா மேடைக்கு வரும் அமித் ஷா, பாதயாத்திரையைத் தொங்கிவைத்து உரையாற்றிவிட்டு, இரவு விடுதியில் தங்குகிறார்.
அதைத் தொடர்ந்து நாளை அதிகாலை ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தரிசனம் செய்கிறார். பின்னர் அப்துல் கலாம் இல்லத்துக்குச் சென்று அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டு, கலாமின் குடும்பத்தாரைச் சந்திக்கிறார். அடுத்ததாக குந்துகால் கடற்கரையில் அமைந்திருக்கும் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்குச் செல்வதோடு, தன்னுடைய இரண்டு நாள்கள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.
இன்று பாதயாத்திரை தொடங்கப்படவிருப்பதையொட்டி, நேற்று மாலையே ராமேஸ்வரத்துக்கு குடும்பத்துடன் வந்த அண்ணாமலை, ராமேஸ்வரம் வடக்கு ரத வீதியில் ராம் ஆஞ்சநேயா சத்திரத்திலுள்ள கோயிலில் குடும்பத்துடன் திடீர் பூஜை செய்தார். பாதயாத்திரை எந்தவித அசம்பாவிதங்களுமின்றி சிறப்பாக நடைபெற வேண்டும் என்பதற்காக குடும்பத்துடன் நரசிம்ம பூஜையை நடத்தியதாக பா.ஜ.க-வினர் தரப்பில் சொல்லப்படுகிறது.
அதன் பிறகு விழா மேடையைப் பார்வையிட வந்த அண்ணாமலையை கட்சி நிர்வாகிகள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். நிகழ்ச்சியில் என்ன மாதிரியான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன என்பதை நிர்வாகிகளிடம் கேட்டறிந்த பின்னர் புறப்பட்டுச் சென்றார்.
ராமேஸ்வரத்துக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா வருவதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. வேதாளை அருகே செக்போஸ்ட் அமைத்து ராமேஸ்வரத்துக்குள் வரும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களை தீவிர சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கின்றனர். அதேபோல் ராமேஸ்வரத்திலுள்ள அனைத்து தங்கும் விடுதிகளிலும் அதிரடி ஆய்வு நடத்தி சந்தேகத்துக்கிடமான வகையில் யாரேனும் தங்கியிருக்கிறார்களா எனச் சோதனை செய்தனர்.