ராமேஸ்வரம்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் கூட்டணி கட்சியினர் ஆலோசனை நடத்தினர்.
தமிழகத்தில் ஊழலுக்கு எதிராகவும் தமிழக மக்களுக்கு அனைத்து நலத்திட்டங்களும் சென்றடைவதை உறுதி செய்யும் வகையிலும் “என் மண் என் மக்கள்” என்ற பாதயாத்திரையை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று ராமேஸ்வரத்தில் தொடங்கினார்.
இந்த யாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். இதற்காக இரு நாட்கள் பயணமாக அமித்ஷா தமிழகம் வந்துள்ளார். அவர் இன்று காலை ராமநாதசுவாமி கோயிலில் வழிபாடு நடத்தினார்.
நேற்றைய தினம் தொடக்க விழாவில் திமுக குடும்ப ஆட்சியை கண்டித்து பேசியிருந்தார். அவர் பேசுகையில் குடும்ப ஆட்சி, ஊழல் ஆட்சிக்கு முடிவு வருகிறார் நம் பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகள் இப்போது ஒரு கூட்டணி உருவாக்கியுள்ளார்கள். அந்த கூட்டணிக்கு இந்தியா என பெயர் சூட்டியுள்ளார்கள். இதில் புதிதாக ஒன்றும் இல்லை, கடந்த காலத்தில் இவர்கள் கூட்டிய ஐக்கிய முற்போக்கு கூட்டணிதான்.
பல ஆயிரம் கோடி ஊழல் செய்தவர்கள் இப்போது மீண்டும் ஒன்று கூடி உள்ளனர். காங்கிரஸும் திமுகவும் இணைந்து மக்களிடம் ஓட்டு கேட்க சென்றால் அவர்களுக்கு 2ஜி ஊழல், நிலக்கரி ஊழல்தான் நினைவுக்கு வரும். சோனியா காந்திக்கு ராகுலை பிரதமராக்க வேண்டும், முதல்வர் ஸ்டாலினுக்கு உதயநிதியை முதல்வராக்க வேண்டும். லாலுவுக்கு அவரது மகன் தேஜஸ்வியையும் மம்தாவுக்கு அவருடைய மருமகனையும் முதல்வராக்க வேண்டும்.
இப்படியே இந்த கூட்டணியில் உள்ள கட்சிகள் குடும்ப ஆட்சி செய்து வருகிறார்கள். இந்த கட்சிகள் எதுவும் மக்களுக்கு நன்மை செய்யவில்லை, அண்ணாமலை என் மண், என் மக்கள் யாத்திரை 169 நாட்களில் முடிக்கும் போது நாடாளுமன்றத் தேர்தல் வந்துவிடும். 2024 இல் பாஜக மீண்டும் வென்று ஆட்சியை பிடிக்கும். மோடி பிரதமராவார். தமிழகத்திலும் மாற்றம் வரும் என்றார்.
இந்த நிகழ்வில் கலந்து கொள்ள தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த தமிழக தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்தார் அண்ணாமலை, ஆனால் அவர் உடல்நிலை பாதிப்பு காரணமாக கலந்து கொள்ளவில்லை என சொல்லப்படுகிறது. அவருக்கு பதிலாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அது போல் மற்ற கூட்டணி கட்சிகளின் தலைவர்களான ஜி.கே.வாசன், ஏ.சி.சண்முகம், கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வுக்கு பாமகவுக்கும் தேமுதிகவிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அக்கட்சிகள் பங்கேற்கவில்லை. இந்த நிலையில் நேற்றைய தினம் அமித்ஷா தலைமையில் மேற்கண்ட கூட்டணி கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடந்தது.
இந்த ஆலோசனையில் 2024 இல் தேசிய ஜனநாயக கூட்டணியை வெற்றி பெற செய்ய என்ன மாதிரியான வியூகங்கள் வகுக்கப்படும் என்பது குறித்தும் தேர்தல் வெற்றிக்கு அனைத்து கட்சிகளும் பாடுபட வேண்டும் என்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.