“ஸ்டெர்லைட் ஆலையின் உரிமையாளர் அனில் அகர்வாலை தமிழ்நாட்டில் நுழைய அனுமதிக்க மாட்டோம்” என ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பினர் அறிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தியிடம் பேசினோம், “ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையால் தூத்துக்குடி மக்கள் கால் நூற்றாண்டு காலம் அடைந்த, அடையும் துன்பங்களை நாடே அறியும். நிலம், நீர், காற்று, கடல், மக்களின் உடல்நலம் அனைத்தையும் அழித்து, புற்றுநோய் உள்ளிட்ட பல நோய்களின் காரணியாக அமைந்த ஆலை மக்களின் தொடர் போராட்டத்தினால் கடந்த 2018, மே 22-ம் தேதி சீல் வைத்து மூடப்பட்டது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/07/IMG_20230408_103543.jpg)
கடந்த 2018 ஆகஸ்ட் 18 -ல் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் அளித்த 215 பக்க தீர்ப்பில், ”தமிழ்நாடு அரசு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடியது சரியானதுதான். ஸ்டெர்லைட் ஆலையின் இருப்பிடமே தவறு. ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து கொடிய மிகக் கொடிய நச்சுத்தன்மை வாய்ந்த ஆர்சனிக், பாதரசம் உள்ளிட்ட கழிவுகள் மண்ணிலும் நிலத்தடி நீரிலும் கலக்கப்பட்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளனர். தூத்துக்குடி படுகொலை, தமிழகமெங்கும் சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்காக போராடிக் கொண்டிருக்கும் மக்களுக்கு விடப்பட்ட எச்சரிக்கையாகவே அமைந்தது.
ஸ்டெர்லைட் ஆலையை ஏதாவது ஒரு வழியில் மீண்டும் திறக்க அனில் அகர்வாலும், அவருடைய சக்திவாய்ந்த நண்பர்களும் என்ன திட்டமிடுகிறார்கள், என்ன செய்யப் போகிறார்கள் என்று எதுவுமே தெளிவாகத் தெரியாதச் சூழல் நிலவுகிறது. இந்த நிலையில், ஸ்டெர்லைட் நிறுவனத்தை நடத்தும் வேதாந்தாவின் உரிமையாளர் அனில் அகர்வால் சென்னையில் இயங்கி வரும் ஒரு தனியார் பள்ளியின் விழாவில், வரும் ஆகஸ்ட் 6-ம் தேதி கலந்துகொள்ள தமிழ்நாடு வருகிறார்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/07/sterlite_new.jpg)
போபால் நகரின் ஒட்டுமொத்த அழிவுக்கும் காரணமாக இருந்த யூனியன் கார்பைட் நிறுவனத்தின் தலைவர் வாரன் அன்டர்சன் டெல்லியில் நடைபெறும் பள்ளி விழாவுக்கு வருகை வந்தால், அதை அனுமதிப்போமா? ஈழத்தில் இனப்படுகொலை நடத்தி ஒன்றரை லட்சம் தமிழர்களைக் கொன்றுகுவித்த மகிந்த ராஜபக்சே மதுரையிலோ, திருச்சியிலோ நடக்கும் கல்லூரி பட்டமளிப்பு விழாவுக்கு விருந்தினராய் வருவதை ஏற்றுக் கொள்வோமா? மாட்டோம் என்றால், அனில் அகர்வால் சென்னைக்கு வருவதற்கும் நாம் உடன்பட முடியாது. ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பினர் மட்டுமில்லாமல் தூத்துக்குடி மக்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள்” என்றார்.