சென்னை:
கார்ல் மார்க்ஸ் குறித்து ஏற்கனவே சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறியுள்ள தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தற்போது மீண்டும் அவரை வம்புக்கு இழுத்துள்ளார். குடும்பம் வேண்டாம் என்று கார்ல் மார்க்ஸ் நினைத்ததாகவும், அதை நினைக்கும் போது வேடிக்கையாக உள்ளது எனவும் அவர் கிண்டல் செய்துள்ளார்.
இந்தியாவில் தற்போது இருக்கும் ஆளுநர்களிலேயே அதிக அளவில் விமர்சிக்கப்படுபவர் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தான். தமிழக அரசுக்கு எதிராக செயல்படுவதாக நினைத்துக் கொண்டு அவர் செய்யும் செயல்கள் பல நேரங்களில் பெரிய சர்ச்சைகளையும், விமர்சனங்களையும் ஈர்த்து வருகின்றன.
அதுமட்டுமல்லாமல், பாஜகவின் அடிநாதமான சனாதன தர்மத்துக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வது, இடதுசாரி சிந்தனைவாதிகளை விமர்சிப்பது என அவரது செயல்பாடுகள் கண்டனத்துக்கு உள்ளாகி வருகின்றன.
குறிப்பாக, இடதுசாரி தத்துவத்தை உருவாக்கிய கார்ல் மார்க்ஸை அண்மையில் ஆர்.என். ரவி கடுமையாக விமர்சித்தார். “மார்க்ஸின் சித்தாந்தமானது இல்லாதவர்கள் மேலே வர வேண்டும் என்கிறது. இது பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்கும் இடையே மோதலை உருவாக்குகிறது. இது சமூகத்தில் பிளவையும், மோதலையும் உருவாக்குகிறது” எனக் கூறினார். ஆளுநரின் இந்தக் கருத்துக்கு இடதுசாரி தலைவர்கள் மட்டுமல்லாமல் பல அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், தற்போது மீண்டும் கார்ல் மார்க்ஸை விமர்சித்து சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறார் ஆளுநர் ரவி. இதுகுறித்து சென்னையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
கார்ல் மார்க்ஸ் தனித்து வாழ்வதையே பெரிதும் விரும்பினார். அவரது வளர்ச்சியையும், சமூகப் பணிகளையும் தனது குடும்பம தடுக்கும் என நம்பி இருக்கிறார். இதை நினைக்கும் போது எவ்வளவு வேடிக்கையாக இருக்கிறது. இதை பார்ப்பதற்கும், கேட்பதற்கும் வேண்டுமானால் சிறந்த யோசனையை போல தோன்றலாம். ஆனால் அது யதார்த்தம் கிடையாது. உண்மையில் சொல்லப்போனால், குடும்பம்தான் ஒரு மனிதனின் வளர்ச்சி பேருதவியாக இருக்கும். ஒருவரை சாதிக்க வைப்பதும், சமூகத்தில் சிறந்த மனிதராக மாற்றுவதும் குடும்பம்தான் என ஆளுநர் பேசினார்.