சென்னை: கிருஷ்ணகிரி பட்டாசுக் கடை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “கிருஷ்ணகிரியில் உள்ள பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட விபத்தில் மதிப்புமிக்க உயிர்கள் பலியாகியிருப்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. எனது பிரார்த்தனைகளும் எண்ணங்களும் துயரமடைந்த குடும்பத்தினருடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்” என்று அதில் கூறியுள்ளார்.
கிருஷ்ணகிரியில் உள்ள பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட விபத்தில் மதிப்புமிக்க உயிர்கள் பலியாகியிருப்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. எனது பிரார்த்தனைகளும் எண்ணங்களும் துயரமடைந்த குடும்பத்தினருடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். – ஆளுநர் ரவி
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) July 29, 2023
உயிரிழப்பு 9 ஆக அதிகரிப்பு: கிருஷ்ணகிரி பட்டாசுக் கடை விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. பழைய பேட்டை நேதாஜி சாலையில் ஆரோக்கியசாமி என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் ரவி என்பவர் பட்டாசு கடை மற்றும் குடோன் நடத்தி வந்தார். அந்த கடைக்கு அருகில் ராஜேஸ்வரி என்பவர் உணவகம் நடத்தி வந்தார். இந்நிலையில், இன்று (சனிக்கிழமை) காலை 9.30 மணியளவில் உணவகத்தில் இருந்த சிலிண்டர் வெடித்து, அந்த தீயானது பட்டாசு கடைக்கு பரவியதாக முதற் கட்ட தகவல் தெரிவித்தன.
இந்த விபத்தில் ராஜேஸ்வரி (55), பட்டாசு கடைக்காரர் ரவி, அவரது மனைவி ஜெயஸ்ரீ, மகள் ருத்திகா, மகன் ருதீஷ் உள்பட 9 பேர் பலியாகினர். 7 பேர் காயமடைந்தனர். பட்டாசு கடையில் இருந்தவர்கள் உடல் தூக்கி வீசப்பட்டதால் அப்பகுதியில் உடல் பாகங்கள் சிதறி விழுந்து காண்போர் மனங்களை உலுக்குவதாக அமைந்தது. இந்நிலையில், சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சியர் சரயு, எஸ்பி சரோஜ் குமார் தாக்கூர் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். திமுக எம்எல்ஏ மதியழகன், அதிமுக எம்எல்ஏ அசோக்குமார் ஆகியோரும் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர்.
நிகழ்விடத்தை ஆய்வு செய்த பின்னர் ஆட்சியர் கூறுகையில், “உணவகத்தில் சிலிண்டர் வெடித்து பட்டாசு கடைக்கும் தீ பரவியதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மீட்புப் பணி தீவிரமாக நடந்து வருகிறது” என்று தெரிவித்தார். விபந்து நடத்த இடத்துக்கு அருகில் இருந்த பல வீடுகளில் கண்ணாடி உடைந்துள்ளது. விபத்து நடந்தபோது சாலையில் இருச்சக்கர வாகனத்தில் சென்றோர், நடந்து சென்றோர் மீதும் கட்டிட இடிபாடுகள் சிதறி விழுந்து காயம் ஏற்பட்டுள்ளது.