'கோமாளி… அதுக்கு ஏன் பாத யாத்திரை?' அண்ணாமலையை சரமாரியாக வெளுத்த காயத்ரி ரகுராம்!

தமிழக பாஜக நிர்வாகிகளில் ஒருவராக இருந்தவர் நடிகையும் நடன இயக்குநருமான காயத்ரி ரகுராகும். சொந்தக் கட்சி நிர்வாகிகள் குறித்தே விமர்சனம் செய்ததால், கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதன்பிறகு தொடர்ந்து தமிழக பாஜகவையும் தமிழக பாஜக தலைவரான அண்ணாமலையையும் விமர்சித்து வருகிறார் காயத்ரி ரகுராம்.

இந்நிலையில் தமிழக பாஜக தலைவரான அண்ணாமலை நேற்று என் மண் என் மக்கள் என்ற தமிழகம் முழுவதுமான நடை பயணத்தை தொடங்கினார். 168 நாட்கள் நடைபெறும் இந்த நடை பயணத்தின் மூலம் 234 தொகுதிகளில் உள்ள மக்களையும் நேரடியாக சந்தித்து பாஜக அரசின் 9 ஆண்டு கால சாதனையை எடுத்து கூறவுள்ளார் அண்ணாமலை.

நேற்று ராமேஸ்வரத்தில் தொடங்கிய அண்ணாமலையின் இந்த பயணத்தை மத்திய அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். முன்னதாக தொடக்க விழாவில் பேசிய அமித் ஷா, அண்ணாமலை ஒரு டிவீட் போட்டால் தமிழக அரசியலில் பூகம்பமே வருகிறது என்று கூறினார். மேலும் தமிழகத்தில் ஆளும் திமுக ஊழலில் திளைத்திருப்பதாகவும் விமர்சித்தார்.

இந்நிலையில் அமித்ஷாவின் இந்த பேச்சுக்கு கவுன்டர் கொடுத்துள்ளார் காயத்ரி ரகுராம். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவீட்டில், அண்ணாமலையின் ட்வீட்டைப் பார்த்து ஒட்டுமொத்த தமிழகமே சிரிக்கும்போது அந்த அதிர்வு பூகம்பம் போல் தான் இருக்கும் என நக்கலடித்துள்ளார். மேலும் யாரோ ஒருவர் தினமும் உங்களுக்கு தவறான தகவல்களைத் தருகிறார் என்றும் இந்த கோமாளி துண்டை நீங்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தனது மற்றொரு பதிவில், ஒரு ட்வீட் பூகம்பத்தை உருவாக்கும் என்றால், ஏன் பாத யாத்திரை? செல்ல வேண்டும்? செய்தியை ஒரு ட்வீட்டில் அனுப்பலாம் என்றும் கூறியுள்ளார். மேலும் இந்த கோமாளியை தமிழ்நாட்டில் யாரும் அறிய விரும்பவில்லை என்றும் அவருடைய சுரண்டல் சேவை யாருக்கும் தேவையில்லை என்றும் காயத்ரி ரகுராம் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மேலும் பாஜகவின் இரட்டை வேடத்தை அதிமுக மறந்துவிடக் கூடாது என்றும் களேபரத்தை கூட்டியுள்ளார். இதுவரை அண்ணாமலையையும் அவரது ஆதரவாளர்களையும் மட்டுமே குறி வைத்து தாக்கி வந்த காயத்ரி ரகுராம், தற்போது ஒட்டுமொத்த பாஜகவுக்கும் எதிராக பேசி தொடங்கியிருப்பதும், பாஜகவுடன் அதிமுக கூட்டணியில் உள்ள நிலையில் அவர்களுக்கு ஆபத்து என்பதை போலவும் எச்சரித்து டிவிட்டியிருப்பது பாஜக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.