அயோத்தி: உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது.
இதுகுறித்து ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் கூறும்போது, ‘‘அயோத்தி ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளன. அடுத்த ஆண்டு ஜனவரி 15-ம் தேதி முதல்24-ம் தேதிக்குள் ராமர் கோயில் குடமுழுக்கை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. பிரதமர் மோடி உட்பட சுமார் 10,000 பேர் இதில் பங்கேற்பார்கள்’’ என்று தெரிவித்தார்.
இந்நிலையில், அயோத்தியில் ஓட்டல்கள், விடுதிகளின் அனைத்து அறைகளும் இப்போதே முன் பதிவு செய்யப்பட்டுவிட்டன.
இதுகுறித்து அயோத்தி ஓட்டல் நிர்வாகிகள் கூறியதாவது: ராமர் கோயில் குடமுழுக்கு எந்தநாளில் நடைபெறும் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எனினும் அடுத்த ஆண்டு ஜனவரி 20 முதல் 24-ம் தேதி வரையிலான நாட்களில் ஓட்டல்கள், விடுதிகளில் தங்கும் அறைகள் முன்பதிவு செய்யப்பட்டு உள்ளன. சுமார் 5,000 அறைகள் உள்ளன.
இதில் 4,000 அறைகள் இப் போதே முன்பதிவு செய்யப்பட்டு விட்டன. அரசு அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி சுமார் 1,000 அறைகளை மட்டும் முக்கிய பிரமுகர்களுக்காக ஒதுக்கி வைத் துள்ளோம். இவ்வாறு ஓட்டல் நிர்வாகிகள் கூறினர்.