சென்னை:
தமிழகத்தின் அடுத்த முதல்வராக உதயநிதி ஸ்டாலினை கொண்டு வருவதே மு.க. ஸ்டாலினின் லட்சியம் என பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா கூறிய நிலையில், அதற்கு
பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பாத யாத்திரையை அமித் ஷா ராமேஸ்வரத்தில் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதையடுத்து அங்கு நடைபெற்ற பாஜக கூட்டணிக் கட்சிகளின் பொதுக்கூட்டத்தில் அமித் ஷா பேசும் போது, திமுக அரசையும், எதிர்க்கட்சிகளின் கூட்டணியையும கடுமையாக விமர்சித்தார். “சோனியா காந்திக்கு தனது மகன் ராகுல் காந்தியை பிரதமராக்க வேண்டும் என்பதே லட்சியம்; லாலு பிரசாத்துக்கு தனது மகன் தேஜஸ்வியை பிரதமராக்க வேண்டும் என ஆசை; அதேபோல தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு உதயநிதியை முதலமைச்சராக்க வேண்டும் என்பதே லட்சியம்” எனப் பேசினார்.
இந்நிலையில், சென்னையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
அமித் ஷா நேற்று தமிழ்நாட்டுக்கு வந்து பேசிட்டு போயிருக்காரு. என்னை பற்றியெல்லாம் பேசியிருக்காரு. என்னை முதலமைச்சர் ஆக்குவது மட்டும்தான் நமது கழகக் தலைவருடைய லட்சியம் என அமித் ஷா கண்டுபிடிச்சிருக்காரு. நான் மக்களை சந்தித்து தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகி, பின்னர் தலைவரின் வழிகாட்டுதலின் பேரில் அமைச்சராக பொறுப்பேற்றிருக்கிறேன். நான ஒன்னே ஒன்னு மட்டும் அமித் ஷாவிடம் கேட்டுக்குறேன். உங்கள் மகன் எப்படி பிசிசிஐ தலைவராக ஆனாரு.
உங்கள் மகன் எத்தனை கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிருக்காரு. எத்தனை ரன் அடிச்சிருக்காரு. இதை ஏதாவது நான் கேட்டிருக்கேனா? அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா ஒரு நிறுவனத்தை நடத்துகிறார். 2014-இல் பாஜக ஆட்சிக்கு வந்த சமயத்தில் அந்த நிறுவனத்தின் மதிப்பு 75 லட்சம் ரூபாய். இன்னைக்கு அந்த நிறுவனத்தின் மதிப்பு எவ்வளவு தெரியுமா? 130 கோடி ரூபாய். எப்படி வந்தது இந்த வளர்ச்சி? இதுக்கெல்லாம் அமித் ஷா பதில் சொல்வரா? இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.