இம்பால்: மணிப்பூரில் 2 குக்கி பழங்குடியின பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டது ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியது. இதுகுறித்த சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் அடுத்ததாக எடுக்கவுள்ள அதிரடி நடவடிக்கை பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக பீரன் சிங் உள்ளார். இங்கு வசிக்கும் குக்கி இன மக்கள் பழங்குடியினர் பிரிவில் உள்ளனர். இந்நிலையில் மைத்தேயி பிரிவு மக்கள் தங்களையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க கோரிக்கை வைத்துள்ளனர்.
இதற்கு குக்கி இன மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதுதொடர்பாக இருதரப்பு மக்களிடையே ஏற்பட்ட மோதல் கடந்த மே மாதம் 3ம் தேதி வன்முறையானது. இந்த வன்முறை இன்னும் அடங்கவில்லை. இதனால் மணிப்பூரில் கடந்த இரண்டரை மாதமாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இதற்கிடையே தான் கடந்த மே மாதம் 4ம் தேதி மணிப்பூரில் குக்கி இனத்தை சேர்ந்த 2 பழங்குடியின மக்களை ஒரு கும்பல் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்று சித்ரவதை செய்த வீடியோ சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இதில் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். மணிப்பூரின் காங்போக்பி மாவட்டம் பைனோம் கிராமத்தில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ள நிலையில் பலாத்காரம், கடத்தல் உள்ளிட்ட வெவ்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் 7 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதற்கிடையே தான் மணிப்பூர் வன்முறை குறித்து சிபிஐ விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.
அதன்படி 2 பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்று சித்ரவதை செய்தது தொடர்பாக சிபிஐ இன்று வழக்குப்பதிவு செய்துள்ளது. அதன்படி மணிப்பூர் போலீசார் வழக்கு தொடர்பான விசாரணை விபரங்கள், கைப்பற்றப்பட்ட பொருட்களை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும். மேலும் இந்த வழக்கில் சிபிஐ அதிகாரிகள் விரைவில் விசாரணையை தொடங்க உள்ளனர்.
முதற்கட்டமாக தற்போது மணிப்பூர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள 7 பேரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ முடிவு செய்துள்ளது. அவர்கள் கொடுக்கும் தகவல் மற்றும் வீடியோவில் இருக்கும் நபர்களை அடையாளம் கண்டு அடுத்தடுத்து மற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சிபிஐ முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர சம்பவம் நடந்த இடத்தை நேரில் பார்வையிடும் சிபிஐ அதிகாரிகள், பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான பாதிக்கப்பட்ட பெண்களிடமும் வாக்குமூலம் பெற உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.