நீலகிரி மாவட்டத்தின் கூடலூர் பகுதி தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களின் எல்லைப் பகுதியில் அமைந்திருக்கிறது. மூன்று மாநில எல்லையிலும் வாகன சோதனை 24 மணி நேரமும் நடைபெறுவது வழக்கம். ஆனால், குட்கா, ரேஷன் அரிசி, கஞ்சா உள்ளிட்ட பொருள்களை சட்டவிரோதமாக மாநிலம் விட்டு மாநிலம் கடத்திச் செல்லும் சம்பவமும் குறைந்த பாடில்லை. காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை ஏற்றிச் செல்லும் சில வாகனங்களில் சட்டவிரோத கடத்தல் நடைபெறுவதால் அவற்றை கூடுதல் கவனத்துடன் கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே நாடுகாணி சோதனைச்சாவடியில் காவல்துறையினர் நேற்று வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டு வந்திருக்கின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து கேரளாவிற்கு அரிசி ஏற்றிச் சென்ற சரக்கு வாகனத்தை சோதனை செய்திருக்கின்றனர். லாரி ஓட்டுனரின் நடவடிக்கையைக் கண்டு சந்தேகம் அடைந்த காவல்துறையினர் சோதனையைத் தீவிரப்படுத்தியிருக்கின்றனர். அரிசி முட்டைகளுக்குள் கஞ்சா பொட்டலங்களை பதுக்கி வைத்திருப்பதைக் கண்டறிந்து கைப்பற்றியிருக்கின்றனர்.
இது குறித்து தெரிவித்த காவல்துறையினர், “பிஸ்கட், காய்கறி, அரிசி போன்ற பொருள்களுக்கு இடையே சட்டவிரோத பொருள்களை கடத்திச் செல்லும் போக்கு அதிகரித்து வருகிறது. இந்த வாகனத்தில் அரிசி மூட்டையில் இருந்த 2 கிலோ கஞ்சாவை கைப்பற்றி லாரியையும் பறிமுதல் செய்திருக்கிறோம். கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்த 37 வயதான சுனீஷ் என்பவரை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்றனர்.