முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகளிருக்கு நன்மை பயக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை செயல்படுத்த இந்த ஆண்டுக்கு 7000 கோடி ரூபாய் ஒதுக்கினார். ஒவ்வொரு மாதமும் தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடி பெண்களின் வங்கிக் கணக்குக்கு மாதம் 1000 ரூபாய் அனுப்பப்பட உள்ளது. இதன் அடுத்தகட்ட பணிகள் வேகமடுத்துள்ளன.
மகளிர் உரிமைத் தொகை டோக்கன் விநியோகம்மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு தகுதி வாய்ந்த பயனாளிகளை கண்டறிவதற்காக விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டு அதை பதிவு செய்ய சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஜூலை 24ஆம் தேதி திங்கள் கிழமை முதல்வர் ஸ்டாலின் இதை தொடங்கி வைத்தார். இதற்காக வீடு வீடாக சென்ற ரேஷன் கடை ஊழியர்கள் விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன்களை விநியோகித்தனர்.
இரண்டாம் கட்ட முகாம்!ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை முதற்கட்ட முகாம்கள் நடைபெறும் நிலையில் ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் இரண்டாம் கட்ட முகாம்கள் நடைபெறுகின்றன. முதல்கட்ட முகாம் சமயத்திலேயே 80 சதவீததுக்கும் மேலான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் இரண்டாம் கட்ட முகாம்களுக்காக விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன.
சிவ்தாஸ் மீனா நடத்திய ஆலோசனை?ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 16ஆம் தேதி வரை 14,825 நியாவிலை கடைகளுக்கு உட்பட்ட குடும்பங்களுக்கு மகளிர் உரிமைத் தொகை முகாம்கள் நடைபெற உள்ளன. இது தொடர்பாக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். இந்த திட்டத்தின் மாநில கண்காணிப்புக் குழு தலைவராக உள்ள சிவ்தாஸ் மீனா நடத்திய கூட்டத்தில் ஆகஸ்ட் 1 முதல் 4ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு முழுமையாக விண்ணப்பங்களை விநியோகம் செய்ய வேண்டும் என்று கூறினார்.
ஒரு நாளுக்கு 60 பேர்!நாள் ஒன்றுக்கு 60 டோக்கன்கள் என்றால் அனைத்தையும் அனைத்து பகுதிகளுக்கும் விநியோகம் செய்யாமல், ஒவ்வொரு குறிப்பிட்ட பகுதியாக பிரித்து டோக்கன் வழங்க வேண்டும். விண்ணப்பங்களில் ரேஷன் அட்டை எண் தவறாமல் எழுத வேண்டும். முகாம்கள் நடக்கும் நாள், நேரத்தை டோக்கனில் தெளிவாக எழுதியிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
நிபந்தனைகள் – தளர்வுகள் எப்போது?திட்டமிட்டபடி இரண்டு கட்ட முகாம்கள் நடைபெற்ற பின்னர் தகுதி வாய்ந்தவர்களை மட்டும் இத்திட்டத்தில் இணைக்கும் பணிகள் நடைபெறும். பலரும் விண்ணப்பித்திருந்தாலும் அதில் குறிப்பிட்ட அளவிலானோரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு ஒரு கோடி பயனாளிகள் மட்டும் இறுதி செய்யப்படுவார்கள். தமிழக அரசு அறிவித்துள்ள நிபந்தனைகளில் தளர்வுகளை மக்கள் எதிர்பார்த்தாலும் தற்போதைக்கு அதில் மாற்றம் வர வாய்ப்பில்லை என்று கூறுகிறார்கள் கோட்டை வட்டாரத்தினர்.
தமிழக அரசு எடுக்கும் முடிவு!அடுத்த ஆண்டும் மாதம் 1000 கோடி என்ற கணக்கில் 12ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதனால் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக இந்த திட்டத்தின் பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பாக முடிவெடுக்க வாய்ப்பு உள்ளதாக கூறுகின்றனர். அதுவரை நிபந்தனைகளில் தளர்வு இல்லை என்பதே கோட்டை வட்டாரத்திலிருந்து வந்துள்ள தகவல்.