காந்திநகர்: “சில ஆண்டுகளுக்கு முன்பு செமி கண்டக்டர் துறையில் இந்தியா ஆரம்ப நிலையில் இருந்தது. இன்று அத்துறையில் அதிக முதலீட்டை ஈர்க்கும் நாடாக இந்தியா உருவாகி வருகிறது” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் செமிகண்டக்டர் துறை வளர்ச்சி தொடர்பாக ‘செமிகான் இந்தியா 2023’ என்ற தலைப்பில் 3 நாள் மாநாடு குஜராத் தலைநகர் காந்திநகரில் நேற்று ஆரம்பமானது. இம்மாநாட்டை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, மின்னணு சாதன தயாரிப்பில் இந்தியா அடைந்திருக்கும் வளர்ச்சிகுறித்தும், செமிகண்டக்டர் துறையில் உருவாகி வரும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்தும் பேசினார்:
“2014-ம் ஆண்டில் இந்தியாவில் மின்னணு சாதன உற்பத்தி 30 பில்லியன் டாலராக (ரூ.2.46 லட்சம்கோடி) இருந்தது. தற்போது அது 100 பில்லியன் டாலராக (ரூ.8.20 லட்சம் கோடி) உயர்ந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மின்னணு சாதன ஏற்றுமதி இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது.
முன்பு இந்தியா வெளிநாடுகளிலிருந்து மொபைல் போன்களை இறக்குமதி செய்தது.ஆனால், இன்று உலகநாடுகளுக்கு இந்தியாவிலிருந்து மொபைல் போன்கள் ஏற்றுமதியாகின்றன. செமிகண்டக்டர் துறையை எடுத்துக் கொண்டால், இந்தியாவில் முதலீட்டு வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
கடந்த ஆண்டு நடைபெற்ற ‘செமிகான் இந்தியா’ நிகழ்வில், முதலீட்டாளர்கள் தாங்கள் ஏன் இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டும் என்று கேட்டார்கள். ஆனால், இன்று அவர்கள் முதலீட்டுக்கு ஏற்ற நாடாக இந்தியாவைப் பார்க்கின்றனர். இந்தியா தங்களுக்கு ஒருபோதும் அதிருப்தியை ஏற்படுத்தியதில்லை என்று முதலீட்டாளர்கள் கூறுகின்றனர்.
செமிகண்டக்டர் தயாரிப்புக்கான வலுவான கட்டமைப்பை இந்தியா உருவாக்கிக் கொண்டிருக்கிறது. நம்முடைய தேவைக்காக மட்டும் நாம் செமிகண்டக்டர் கட்டமைப்பை உருவாக்கவில்லை. செமிகண்டக்டர் விநியோகம் சார்ந்து நம்பகமான ஒரு துணையை உலக நாடுகள் எதிர்பார்க்கின்றன. உலக நாடுகள் இந்தியாவை நம்புகின்றன. ஏனென்றால், இந்தியா நிலையான, பொறுப்புமிக்க, சீர்த்திருங்கள் மேற்கொள்ளும் அரசைக் கொண்டிருக்கிறது. மேலும், இந்தியாவின் உள்கட்டமைப்பு வேகமாக வளர்ந்து வருகிறது திறன்மிக்க பொறியாளர்கள், வடிவமைப்பாளர்களை இந்தியா கொண்டிருக்கிறது. இதனால், முதலீட்டாளர்கள் இந்தியாவை நம்புகின்றனர்” என்று அவர் தெரிவித்தார்.