மதுரை: வருமான வரி அதிகாரிகளைத் தாக்கிய வழக்கில் கரூர் திமுகவினர் 15 பேருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் வீட்டில் வருமான வரிச்சோதனை நடத்தியபோது, வருமான வரி அதிகாரிகளைத் தாக்கி,ஆவணங்களைப் பறித்துச் சென்றதாக திமுகவினர் மீது புகார் அளிக்கப்பட்டது. போலீஸார் வழக்கு பதிவு செய்து, திமுகவினர் பலரைக் கைது செய்தனர்.
இதில் திமுகவினர் 15 பேர் கரூர் நீதிமன்றத்தில் ஜாமீன், முன்ஜாமீன் பெற்றனர். இதை ரத்து செய்யக் கோரி, வருமான வரித் துறை சார்பில் உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிஇளங்கோவன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது வழக்கை விசாரித்த நீதிபதி, “வருமான வரிஅதிகாரிகளைத் தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டோருக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய ஜாமீன் ரத்து செய்யப்படுகிறது.
அவர்கள் 3 நாட்களில் கரூர்தலைமைக் குற்றவியல் நடுவர்முன் சரணடைய வேண்டும். அங்குஅவர்கள் ஜாமீன் மனுவைத் தாக்கல் செய்யலாம். அந்த மனுக்களை கரூர் நீதிமன்றம் முன்னுரிமை அடிப்படையில் விசாரித்து, உரிய உத்தரவு பிறப்பிக்கலாம்” என உத்தரவிட்டார்.