நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சுனில் ஆகியோரின் நடிப்பில் ‘ஜெயிலர்’ திரைப்படம் உருவாகியிருக்கிறது. இத்திரைப்படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நேரு அரங்கத்தில் நடைபெற்றது.
இந்த விழாவில் இயக்குநர் நெல்சன், ரஜினிகாந்த் மற்றும் அவரின் மனைவி லதா ரஜினிகாந்த், ரஜினிகாந்தின் சகோதரர் பங்கேற்றனர். மேலும், ஜாக்கி செராப், சிவராஜ்குமார், ரெடின் கிங்ஸ்லி, அனிருத், விக்னேஷ் சிவன், அருண்ராஜா காமராஜ், சூப்பர் சுப்பு ஆகியோரும் இந்த விழாவில் கலந்துகொண்டனர். இந்த விழாவில் ரஜினி நெல்சனிடம் கதை கேட்ட நிகழ்வு, பீஸ்ட் எதிர்மறை விமர்சனங்களால் விநியோகஸ்தர்கள் கூறியது, ரசிகர்களுக்கு அறிவுரை, மது பழக்கத்தினால் ஏற்பட்ட தீங்குகள் எனப் பல விஷயங்களை ரஜினி மேடையில் பகிர்ந்து கொண்டார். மேலும், ரஜினி மேடையில் கூறிய காக்கா – பருந்து கதை தான் தற்போதைய வைரல் டாக். அந்த கதை இதுதான்!
“காட்டுல சின்ன மிருகங்களெல்லாம் எப்பவும் பெரிய மிருகங்களை தொல்லை பண்ணிக்கிட்டே இருக்கும். இப்போ, உதாரணத்துக்கு காக்கா எப்பவும் கழுக சீண்டிக்கிட்டே இருக்கும். ஆனால், கழுகு எப்பவுமே அமைதியா இருக்கும். பறக்கும் போது கழுக பார்த்து காக்கா உயரமா பறக்க நினைக்கும். இருந்தாலும் காக்காவால அது முடியாது. ஆனால், கழுகு இறக்கையைகூட ஆட்டாம எட்ட முடியாத உயரத்துல பறந்துக்கிட்டே இருக்கும். உலகின் உன்னதமான மொழி ‘மெளனம்’தான்!. சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு பிரச்னை இப்போ இல்ல 1977-லயே ஆரம்பிச்சிருச்சு.”
அப்போ எனக்கு ஒரு படத்துல சூப்பர் ஸ்டார்னு டைட்டில் போட்டப்ப நானே வேணாம்னு சொன்னேன். ஏன்னா, அப்ப கமல் ரொம்ப பெரிய உயரத்துல இருந்தாரு. சிவாஜியும் ஹீரோவா நடிச்சிட்டு இருந்தாரு. அதனால சூப்பர் ஸ்டார் பட்டம் வேணாம்னு சொன்னேன். ஆனால், ரஜினி பயந்துட்டாருன்னு சொன்னாங்க. நாம பயப்படுறது ரெண்டே பேருக்குதான். ஒன்னு அந்த பரம்பொருள் கடவுளுக்கு இன்னொன்னு நல்லவங்களுக்கு. மற்றபடி யாருக்கும் பயப்படுறதில்ல. இதுக்கு அப்புறம் இதை கேட்டவுடனே சோஷியல் மீடியால `அவர காக்கானு சொல்லிட்டாரு. இவர கழுகுனு சொல்லிட்டாருனு போடாதீங்க.” என குட்டி கதையை முடித்தார்