சென்னை: மத்தியில் பாஜக ஆட்சி இன்னும் சில மாதங்கள்தான். அதன்பிறகு இந்தியாவுக்கு விடியல் பிறக்க போகிறது என்று திமுக இளைஞரணி புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
திமுக இளைஞரணி மாவட்ட, மாநில, மாநகர அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் அறிமுகக்கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்தது. இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் பேசியதாவது: புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் இளைஞரணியின் மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்களான உங்களை எல்லாம் பார்க்கும்போது, மகிழ்ச்சி, புத்துணர்ச்சியை நான் பெற்றுக் கொண்டிருக்கிறேன்.
இன்னும் வெளிப்படையாகச் சொல்ல வேண்டும் என்றால், நான் இப்போது மிகவும் இளமையாக உணர்கிறேன். எல்லாப் புகழும் இந்த இளைஞரணிக்குத்தான்.
நீங்கள் இளவட்டங்கள் அல்ல.கட்சியினுடைய இளம் ரத்தங்கள். உங்களுக்கு பொறுப்புகள் வழங்கி,கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சியிருக்கும் இளைஞரணிச் செயலாளர் உதயநிதியை நான் மனதாரப் பாராட்டுகிறேன். இந்தப் பொறுப்பு உங்களுக்கு சாதாரணமாக கிடைத்துவிடவில்லை. உங்கள் உழைப்புக்கு கிடைத்திருக்கும் அங்கீகாரம் இது. இதை நீங்கள் பொறுப்பாக காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.
‘பாவ யாத்திரை’: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழகத்துக்கு மத்திய அரசின் புதிய திட்டத்தை தொடங்கி வைக்க வந்தாரா? அல்லது ஏற்கெனவே அறிவித்த மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்து வைக்கவந்தாரா? இல்லை. ஏதோ பாதயாத்திரையைத் தொடங்கி வைக்க வந்திருக்கிறார். அது பாதயாத்திரை இல்லை. குஜராத்தில் 2002-ம் ஆண்டும், இப்போது மணிப்பூரிலும் நடந்த பாவங்களுக்கு மன்னிப்பு கேட்கிற பாவ யாத்திரை.
இந்த நாட்டின் உள்துறை அமைச்சர் அவர். 2 மாதமாக பற்றி எரிகிறமணிப்பூருக்கு சென்று அமைதி யாத்திரை நடத்த முடிந்ததா? ஆனால், அமைதியாக இருக்கிற தமிழகத்தில் கலவரம் ஏற்படாதா? என்ற எண்ணத்தோடு பாதயாத்திரையை தொடங்கி வைக்க வந்திருக்கிறார்.
திமுக குடும்பக்கட்சி என்று அவர்சொல்லியிருக்கிறார். கேட்டுக்கேட்டு புளித்துப்போன ஒன்று. பாஜகவில் எந்தத் தலைவரின் வாரிசும் அரசியல் பதவியில் இல்லையா?பாஜகவில் மாநில வாரியாக பதவியில் இருக்கிற வாரிசுகளின் பட்டியலை நான் சொல்ல ஆரம்பித்தால் ஒரு மணி நேரம் ஆகும்.
அமைச்சர் செந்தில்பாலாஜியின் கைது பற்றியும் பேசியிருக்கிறார். நான் அமித் ஷாவை கேட்கிறேன். குற்ற வழக்குகளில் தொடர்புடைய மத்திய அமைச்சர்கள் எல்லாம்பிரதமர் மோடியின் அமைச்சரவையில்தானே இருக்கிறார்கள். செந்தில் பாலாஜியை அமைச்சராக வைத்திருப்பது பற்றி கேள்வி கேட்கிற நீங்கள், பிரதமர் மோடியிடம் இந்தக் கேள்வியை கேட்கும் தைரியம் உண்டா?
பாஜக தன்னுடைய அரசியல் எதிரிகளை சலவை செய்கிற வாஷிங் மிஷினாக அமலாக்கத் துறையைப் பயன்படுத்தி வருகிறது என்பது இந்தியா முழுவதும் தெரிந்தரகசியம். புலனாய்வு அமைப்புகளை வைத்து, தங்களுக்கு எதிரானவர்களை மிரட்டுவதும், அவர்கள் பாஜக பக்கம் மாறினால் அவர்கள் எல்லோரும் பரிசுத்தமானவர்களாக மாறிவிடுவார்கள் என்பதும் பாஜகவின் அரசியல் பாணி.
மத்திய பாஜக அரசின் ஆட்டம்எல்லாம் இன்னும் சில மாதங்கள்தான். ஜனநாயகம், சமூக நீதி, மதச்சார்பின்மை, அரசியல் சட்டம் என்றுஅனைத்தையும் அழிக்க முயற்சிக்கும் பாஜக ஆட்சி முடியப் போகிறது.இந்தியாவுக்கு விடியல் பிறக்கப் போகிறது. தமிழை, தமிழினத்தை, தமிழக மக்களைக் காக்க வேண்டும் என்றால், இந்தியாவின் ஜனநாயகக் கட்டமைப்பை காப்பாற்றியாக வேண்டும்.
இந்தியாவைக் காப்பாற்ற ‘இண்டியா’வுக்கு வாக்களியுங்கள் என்பதுதான் நம்முடைய தேர்தல் முழக்கமாக அமையப் போகிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தல் களம்,உங்களுக்கு மிகப்பெரிய பயிற்சிக்களமாக அமையப் போகிறது. தேர்தல் பணி, பரப்புரை ஆகியவற்றின் மூலமாக பொதுமக்களைச் சந்திக்க இருக்கிறீர்கள். மக்களைச் சந்திப்பதுதான் மகத்தான பணி. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, துணைப் பொதுச்செயலர் ஆ.ராசா, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.