கடலூர்: தமிழ்நாடு அரசு காவல்துறையை வைத்து விவசாயிகளை வஞ்சிக்கிறது, வழக்கு போட்டு மிரட்டுகிறது என்று தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி ஆர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள வளையமாதேவி கிராமத்தில் என்எல்சி நிறுவனம் விவசாய பயிர் நிலங்களில் கால்வாய் வெட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு விவசாயிகள், அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி ஆர் பாண்டியன் இன்று (ஜூலை.30) மதியம் 12.30 மணிக்கு வளையமாதேவி கிராமத்திற்கு சென்று விவசாயிகளை சந்திப்பதற்காக சேத்தியாத்தோப்புக்கு வந்தார். அப்போது சேத்தியாதோப்பு குறுக்குரோடு பகுதியில் டிஎஸ்பி ரூபேஷ்குமார் தலைமையிலான போலீஸார் அவரை தடுத்து நிறுத்தினர். உள்ளே பணிகள் நடந்து கொண்டிருப்பதால் அங்கு செல்வதற்கு அனுமதி கிடையாது எனக் கூறி அவரை தடுத்தனர்.
அப்போது பிஆர் பாண்டியன், நான் அங்கு சென்றால் என்னால் பாதிப்பு ஏற்படாது. என்னால் என்ன கலவரம் ஏற்படும் என போலீஸாரிடம் கேள்வி எழுப்பினார். ஆனாலும் போலீசார் அவருக்கு அனுமதி மறுத்தனர். இதனை தொடர்ந்து பிஆர். பாண்டியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது. ”1956-ல் என்எல்சி நிறுவனம் துவங்கப்பட்டது. அன்றைக்கு மக்கள் வரவேற்றார்கள். விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தார்கள். வேலைவாய்ப்பு பெருகும். வருவாய் பெருகும் என நம்பி நிலங்களை கொடுத்தார்கள். இரண்டாவது சுரங்கம் அமைக்க நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகிறது. முதல் சுரங்கம் அமைக்க விவசாயிகள் நிலம் கொடுத்தபோது வழங்கிய நிலங்களை வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இன்று வரை அந்த குடும்பத்தினருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இன்று கூட ஒப்பந்த தொழிலாளர்கள் என்எல்சி தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராடுகிறார்கள். நிலத்தை கொடுத்தவர்கள் வேலை கேட்டு வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். முதல் சுரங்கம் அமைக்கின்ற போது உறுதி அளித்தபடி அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை. ஏற்கனவே பரவனாறு வடிகால் வழியாக தண்ணீர் வெளியேறி விவசாய நிலங்களை பாதித்திருக்கிறது. இப்போது பரவனாறு வடிகாலை ஆக்கிரமிப்பு செய்து வடிகால் அமைக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும். இரண்டாவது சுரங்கத்திற்கு நிலங்களை தர மாட்டோம் என விவசாயிகள் மறுத்திருக்கிறார்கள். விவசாயிகளுக்கு என்எல்சி நிறுவனம் ஒப்புக்கொண்டபடி இழப்பீடு தொகை வழங்கவில்லை. தற்போது ரூ.25 லட்சம் இழப்பீடு, வேலை என முதலமைச்சர் சொல்கிறார். ஆனால் இவை எதுவும் வழங்கப்பட்டதாக தெரியவில்லை.
நேற்று முன்தினம் ஒட்டுமொத்த பேரழிவை என்எல்சி நிர்வாகத்தால் கடலூர் மாவட்டம் சந்தித்திருக்கிறது. என்எல்சியை வெளியேற்ற வேண்டும் என்ற இறுதி கட்ட போராட்டம் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் தமிழ்நாடு அரசு காவல்துறையை வைத்து விவசாயிகளை வஞ்சிக்கிறது. வழக்கு போட்டு மிரட்டுகிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் செயல். ஒட்டுமொத்த இந்த நெய்வேலி பகுதி இந்திய வரைபடத்தில் இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. காவல்துறை கிராமங்கள் முழுவதும் குவிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. நிலத்தைப் பிடுங்காதே, வாழ்வாதாரத்தை அழிக்காதே என மக்கள் கதறுகிறார்கள்.
பேரழிவை ஏற்படுத்தும் என்எல்சி நிறுவனத்தை வெளியேற்ற வேண்டும். தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் தலைமையில், வேளாண்மைதுறை, நீர்பாசன துறை, சுற்றுச்சூழல் துறை செயலாளர்கள் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகள் தலைமையில் ஒரு உயர்மட்ட குழுவை அமைத்து என்எல்சியால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு அனுப்பி விவசாயிகளிடம் கருத்து கேட்டு ஆய்வு செய்ய வேண்டும்.ஏற்கெனவே என்எல்சி நிறுவனத்திற்காக நிலங்களை கொடுத்தவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் முதலமைச்சர் தலைமையில் ஒரு ஆய்வுக் கூட்டம் நடத்தி ஆய்வு அறிக்கை அடிப்படையில் என்எல்சி நிறுவனத்தை வெளியேற்ற வேண்டும்.
முதல் சுரங்கத்திற்கு வடிகால் வசதி இல்லாததால் அந்த பணிகளை தடுத்து நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் தமிழ்நாடு முழுவதும் அனைத்து விவசாயிகளையும், கட்சிகளையும் ஒருங்கிணைத்து பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம். இந்த விவகாரத்தில் முதலமைச்சர் விரைந்து நடவடிக்கை எடுத்து உயர்மட்ட குழுவை அனுப்ப வேண்டும். என்னை தடுப்பதன் மூலம் மனித உரிமை மீறலில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டுள்ளது. முதலமைச்சரின் மௌனம் என்பது ஆட்சியின் தவறான செயல். இதனால் தமிழக விவசாயிகள், அரசியல் கட்சிகள் ஒன்றுபட்டு இருக்கிறார்கள். மக்களின் சார்பில் தேர்வு செய்யப்பட்ட முதலமைச்சர் வாய் திறந்து பேசி மக்களுக்கு நீதி கிடைக்க வழி செய்ய வேண்டும்” என கூறினார்.