கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பட்டாசு கடை விபத்துக்கு சிலிண்டர் கசிவு காரணம் என தடயவியல் நிபுணர்கள் அறிக்கை வழங்கி உள்ளதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தகவல் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரியில் பட்டாசு கிடங்கில் நேரிட்ட வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும், 15 பேர் பலத்த காயமடைந்தனர். விபத்தில் 6 கடைகள் தரைமட்டமானதுடன், 10 இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன. இந்த விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களை தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஞாயிற்றுக்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர், அவர்களுக்கான நிவாரண உதவிகளை வழங்கினார்.
அதன்பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியது: “நேற்றைக்கு, மாவட்ட நிர்வாகம், ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் மற்றும் தருமபுரியில் இருந்து தடயவியல் நிபுணர்களை எல்லாம் வரவழைத்து ஆய்வு நடத்தியபோது, பட்டாசு ஆலையில் இருந்த சிலிண்டர் கசிவின் காரணமாகத்தான் இந்த விபத்து ஏற்பட்டது என்று அறிக்கை அளித்துள்ளனர்.
சிலிண்டர் கசிவின் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருந்தாலும், இது எதிர்பாராத விபத்து. மாவட்ட ஆட்சியர், கண்காணிப்பாளரிடம் மாவட்டத்தில், எத்தனை பேர் பட்டாசு ஆலை நடத்த உரிமம் பெற்றுள்ளனர்? அவர்களை எல்லாம் உடனடியாக அழைத்து கூட்டத்தை நடத்தி, குடியிருப்பு பகுதிகளில் ஆலைகளை வைத்துள்ளனரா? அல்லது புறநகர் பகுதிகளில் வைத்துள்ளனரா? என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறோம்.
எனவே, இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கும். மேலும், இதுபோன்ற விபத்து நடக்காமல் இருக்க முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். மேலும், முதல்வர் என்னை தொலைபேசியில் அழைத்து, நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தார். நானும் நடந்த சம்பவம் குறித்து விளக்கியதோடு, தற்போது மருத்துவமனையில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கியது குறித்தும் தெரிவித்தேன். இந்த விவகாரத்தை உற்றுநோக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.
அப்போது தொடர் ஆய்வுகள் இல்லாததால், இதுபோன்ற விபத்துகள் நடப்பதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “இது கிருஷ்ணகிரி மட்டுமல்ல, தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலுமே குடியிருப்புப் பகுதிகளில்தான் வைத்துள்ளனர். புறநகர்ப் பகுதிகளில் வைப்பதில்லை. இருந்தாலும், இந்த ஆலோசனைகளை தமிழக முதல்வரிடம் தெரிவிக்க உள்ளோம்.
அதேபோல், உரிமம் வழங்கிய பின்னர், அந்த ஆலைகளில் மறுபடியும் ஆய்வு செய்யாமல் இருப்பதை தவிர்க்கும் வகையில், பட்டாசு ஆலை நடத்த உரிமம் பெற்றவர்கள், எப்படி அந்த தொழிற்சாலையை நடத்தி வருகின்றனர் என்பதை ஆய்வு செய்யும் விதத்தில், கட்டயம் மாவட்ட நிர்வாகம் அந்த நடவடிக்கைகளில் ஈடுபடும்” என்று அவர் கூறினார்.
முன்னதாக, கிருஷ்ணகிரி பழையபேட்டை மேல்தெருவைச் சேர்ந்த ரவி (46), அங்குள்ள நேதாஜி சாலையில் பட்டாசு மொத்த விற்பனைக் கடை நடத்திவந்தார். இதற்காக அங்குள்ள கிடங்கில் பட்டாசுகளை இருப்பு வைத்திருந்தார். இவரது கடை அருகில் 2 மரக்கடைகள், வெல்டிங் கடை, நிதி நிறுவனம், ஹோட்டல், ஷோபா தயாரிப்பு நிறுவனம், தண்ணீர் சுத்தகரிக்கும் நிறுவனம் மற்றும் குடியிருப்புகள் அமைந்துள்ளன.
இந்நிலையில், நேற்று காலை கடையில் ரவி மற்றும் அவரது குடும்பத்தினர் இருந்தனர். சுமார் 9.45 மணிக்கு கடையிலிருந்த பட்டாசுகள் பயங்கர சப்தத்துடன் வெடித்தன. சில நொடிகளில் பட்டாசுகள் நாலாபுறமும் வெடித்துச் சிதறியதில், கிடங்கு மற்றும் அருகில் இருந்த 6 கடைகள் தரைமட்டமாகின. மேலும், அடுத்தடுத்து இருந்த கடைகள், வீடுகளின் மேற்கூரைகள், ஜன்னல்கள் உடைந்து சிதறின. சுமார் 2 கி.மீ. தொலைவு வரை வெடி சப்தம் கேட்டது.
இந்த விபத்தில் சிக்கிய சிலரின் உடல் பாகங்கள் சிதறி 200 அடி தொலைவுக்கு வீசப்பட்டன. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், காவல், வருவாய்த் துறையினர், நகராட்சி ஊழியர்களும் வந்து, மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில், பட்டாசு கடை நடத்திவந்த ரவி(46), அவரது மகன் ரித்திஷ்(21), மகள் ரித்திகா(19), வெல்டிங் கடை ஊழியர்கள் இப்ராஹிம்(21), இம்ரான்(18), ஹோட்டல் உரிமையாளர் ராஜேஸ்வரி(55), தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பணிபுரிந்த சரசு(35), ஜேம்ஸ், சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற கிருஷ்ணகிரி பில்லனகுப்பம் சிவா (22) ஆகிய 9 பேர் உயிரிழந்தனர். ரவியின் மகள் ரித்திகா கர்ப்பணியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், ரவியின் மனைவி ஜெய(40), பழையபேட்டை ஜாபர்(37), சபியான்(11), பெரிய மட்டாரப்பள்ளி திருப்பதி(65), இர்பான்(20), முனிரத்தினம் (33), உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு தலைமைக் காவலர் சங்கரி(39), இம்ரான்கான்(20), தமிழ்ச்செல்வன்(26), ஜெகதீசன்(48), பார்த்திசாரதி(22), மாதேஷ்(42), ஜெயேந்திரன்(23) உள்ளிட்ட 15 பேர் பலத்த காயமடைந்தனர். விபத்தில் 10-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் சேத மடைந்தன.
கிருஷ்ணகிரி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு மத்திய, மாநில அரசுகள் சார்பில் ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது நினைவுகூரத்தக்கது.