கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் பட்டாசு வெடி விபத்து சக்தி வாய்ந்த வெடி பொருட்கள் இருந்திருக்கலாம் என்று காங்கிரஸ் எம்.பி செல்லக்குமார் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி பழையபேட்டை நேதாஜி சாலையில் பட்டாசு குடோன் வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில் இன்று காங்கிரஸ் எம்.பி செல்லக்குமார் இன்று பார்வையிட்டார்.
அப்போது அவர் கூறியதாவது: ”பட்டாசு கடைக்கு அனுமதி வாங்கியிருந்தாலும், குடியிருப்பு பகுதியில் அனுமதி வழங்கியது தவறான செயலாகும். இந்த வெடி விபத்தில் கான்கீரிட் கட்டிடங்கள் தரைமட்டமாகி உள்ளதை பார்க்கும் போது, பட்டாசு கடையில் சக்தி வாய்ந்த வெடிமருந்துகள் இருந்திருக்கக் கூடும் என்கிற சந்தேகம் எழுகிறது. இதற்கான உண்மையான காரணத்தை கண்டறிய வேண்டும். வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதி உயர்த்தி தர வேண்டும்.
மேலும், வெடி விபத்து நிகழ்ந்த இடத்தின் அருகே உள்ள கடைகள், வீடுகள் சேதமாகி உள்ளது. அவர்களுக்கு உரிய இழப்பீட்டை தர வேண்டும். இனி பட்டாசு கடைகளுக்கு உரிமம் வழங்குவதற்கு முன்பு மக்கள் அதிகம் கூடும் பகுதி, குடியிருப்புகளின் அருகே வழங்குவதை கவனத்தில் கொள்ள வேண்டும்.” இவ்வாறு எம்பி தெரிவித்தார்.
முன்னதாக வெடி விபத்து நிகழ்ந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு எம்.பி ஆறுதல் கூறினார். இந்நிகழ்வில் காங்கிரஸ் கட்சி மாவட்ட துணை தலைவர் சேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.