மொஹரம் என்பது இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக விளங்குகின்றது. மொஹரம் இஸ்லாமிய ஆண்டின் முதலாவது மாதமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இஸ்லாமிய ஆண்டின் நான்கு புனித மாதங்களில் இதுவும் ஒன்றாகும். அதன் அடிப்படையில் மொஹரம் தொடங்கி 10 நாள்களுக்கு விரதம் இருந்து பத்தாவது நாளில் துக்கம் அனுசரிக்கும் விதமாக விரதமிருந்த இஸ்லாமிய இளைஞர்கள் புலி வேடமணிந்து ஊர்வலமாக வந்து வேண்டுதலை நிறைவேற்றுவார்கள்.
இந்த நாளில் நோன்பு இருப்பதால் வாழ்வு வளமாகும். மொஹரம் மாதத்தின் 10-ம் நாள் தியாகத் திருநாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. சில இஸ்லாமியர்கள் இந்த மாதத்தின் 9 மற்றும் 10-ம் நாள்களில் அல்லது 10-ம் நாள் மட்டும் உண்ணா நோன்பு இருப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.
சிலர் இந்தத் தியாகத் திருநாளில் ஆசுரா என்று கத்தியால் தங்களைத் தாங்களே அடித்துக் காயப்படுத்திக் கொண்டு இந்தத் தினத்தைக் கடைப்பிடிக்கின்றனர். அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டத்தில் மொஹரம் திருநாள் வெகு விமர்சையாக நடைபெற்றது. சேலம் மாநகரில் வெங்கடப்பா தெரு, குண்டு போடும் தெரு பகுதியின் இஸ்லாமியர்கள் மொஹரம் தினத்தை முன்னிட்டு புலி வேடம் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் எட்டு வயதுக் குழந்தை புலி வேடம் அணிந்து ஆடிய காட்சி பார்ப்பவர்களை வெகுவாகக் கவர்ந்தது.
இந்தப் புலி வேட ஊர்வலம் நகரின் முக்கியப் பகுதிகளைச் சென்று மீண்டும் தர்காவை அடைந்தது. இது குறித்து இஸ்லாமியர்கள் கூறும் போது, “நினைத்த காரியங்கள் வெற்றி அடையவும், திருமணம் கைகூடவும் குழந்தை பாக்கியம் பெறவும் விரதம் இருப்போம். நிறைவடையும் நாளான மொஹரம் தினத்தில் புலி வேடம் அணிந்து வேண்டுதலை நிறைவேற்றித் தந்ததற்காக நேர்த்திக்கடன் செலுத்துவோம்” எனத் தெரிவித்தனர்.