இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போது மனம் உடைந்துபோய் இருந்ததாக அம்மாநிலத்திற்கு சென்றுள்ள காங்கிரஸ் மக்களவை துணைத் தலைவர் கௌரவ் கோகாய் தெரிவித்து உள்ளார்.
பெரும்பான்மை மெய்தி இன மக்களுக்கு பழங்குடி அந்தஸ்து வழங்குவதை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட குகி பழங்குடியின மக்கள் மீது கடந்த மே மாதம் முதல் தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன. மெய்தி பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர்கள் குகி மக்களின் வீடுகள், கடைகளை சூறையாடி தீக்கிரையாக்கி உள்ளனர்.
3 மாதங்களாக தொடர்ந்து வரும் இந்த வன்முறை வெறியாட்டத்தில் 130 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டு இருப்பதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், பலி எண்ணிக்கை இதைவிட பன்மடங்கு அதிகம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் முன் குகி பழங்குடியின பெண்களை மெய்தி இன வெறியர்கள் நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்து சென்று கும்பலாக பலாத்காரம் செய்த கொடூர காட்சிகள் வெளியாகி உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து எதிர்க்கட்சிகள் பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் இதுபற்றி பேச வேண்டும் என தொடர்ந்து நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக ஆளும் மத்திய பாஜக அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானமும் மக்களவையில் எதிர்கட்சிகளால் கொண்டு வரப்பட்டு உள்ளது.
இதற்கிடையே இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்டு இருக்கும் மணிப்பூர் மாநிலத்துக்கு சென்ற எதிர்க்கட்சிகளின் “இந்தியா” கூட்டணி எம்பிக்கள் அம்மாநில நிலவரம், பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட்டார்கள். வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் வசித்து வரும் மக்களை சந்தித்து அவர்களின் பிரச்சனைகளை கேட்டறிந்தனர்.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மக்களவை காங்கிரஸ் துணைத் தலைவர் கௌரவ் கோகாய், “நாங்கள் மொத்தம் 4 நிவாரண முகாம்களை பார்வையிட்டோம். சுராசந்த்பூரில் 2 முகாம்களையும் இம்பாலில் மற்றும் மொய்ராங்கில் தலா 1 முகாமுக்கும் சென்று பார்வையிட்டோம்.
அங்கு தங்கி இருக்கும் மக்களிடம் பேசினோம். பெண்கள் எங்களிடம் பேசும்போது உடைந்து போனார்கள். அங்கு தங்க வைக்கப்பட்டு உள்ள அனைவருமே அமைதியை விரும்புகிறார்கள். எல்லோரும் தங்கள் வாழ்க்கையை மீட்டு எடுக்கவே விரும்புகிறார்கள். நாங்கள் மணிப்பூர் மாநில ஆளுநரை சந்தித்து எங்களது கருத்துகளை பகிர்ந்து கொள்வோம்.
நாடாளுமன்றத்தில் இது குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இந்த விவகாரத்தில் அதிக தாமதம் ஏற்பட்டு உள்ளதாக நான் நம்புகிறேன். இதற்கு அரசாங்கம் ஒரு தீர்வை வழங்க வேண்டும். மேலும் நாங்கள் அனைவரும் அரசாங்கத்தின் திட்டத்தைக் கேட்டு எங்கள் ஆலோசனைகளை வழங்க விரும்புகிறோம்.” என்று தெரிவித்து உள்ளார்.