இம்பால் : மணிப்பூரில் 2-வது நாளாக “இந்தியா” கூட்டணி எம்.பி.க்கள் நிலைமையை ஆய்வு செய்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து மணிப்பூர் மாநில ஆளுநரை “இந்தியா” கூட்டணி எம்.பி.க்கள் நேரில் சந்தித்து மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
மணிப்பூர் மாநிலத்தில் குக்கி- மைத்தேயி இனக்குழுவினர் இடையேயான மோதல் 3 மாதங்களாக நீடித்து வருகிறது. இம்மோதல்களில் 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 50,000 பேர் மணிப்பூர் மாநிலத்தைவிட்டு அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர்.
மணிப்பூரில் வன்முறைகளை மத்திய அரசு கட்டுப்படுத்த தவறிவிட்டது என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு. மேலும் மணிப்பூர் நிலவரம் தொடர்பாக பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் தர வேண்டும் எனவும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதனால் நாடாளுமன்ற இரு சபைகளும் முடக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் எதிர்க்கட்சிகளின் “இந்தியா” கூட்டணி சார்பாக மணிப்பூர் மாநிலத்துக்கு எம்.பி.க்கள் குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் சென்ற இந்த எம்.பி.க்கள் குழு இரு பிரிவுகளாக பிரிந்து நிவாரண முகாம்களில் தங்கி இருக்கும் மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி விவரங்களை கேட்டு வருகின்றனர். மொத்தம் 26 அரசியல் கட்சிகளின் எம்.பி.க்கள் இக்குழுவில் இடம்பெற்ருள்ளனர். திமுகவின் கனிமொழி எம்பி, விசிகவின் திருமாவளவன், ரவிக்குமார் எம்பி உள்ளிட்டோர் இந்த குழுவில் இடம்பெற்று மணிப்பூர் சென்றுள்ளனர்.
“இந்தியா” கூட்டணி எம்.பி.க்கள் குழு இன்று மணிப்பூர் ஆளுநர் அனுசுயா உய்கேவையும் சந்தித்து பேசினர். இச்சந்திப்பின் போது மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.