இம்பால்: மணிப்பூரில் நிலைமை மோசமடைந்து வருகிறது; மணிப்பூர் பிரச்சனைக்கு தீர்வு காணாமல் விட்டால் ஒட்டுமொத்த தேச பாதுகாப்புக்கே பேராபத்து என “இந்தியா” கூட்டணி எம்.பி.க்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மணிப்பூரில் மைத்தேயி- குக்கி இனக்குழுக்களிடையேயான மோதல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. 3 மாதங்களாக நீடிக்கும் இவ்வன்முறைகளால் பாதிக்கப்பட்ட மக்களை எதிர்க்கட்சிகளின் “இந்தியா” கூட்டணி எம்.பி.க்கள் குழு நேற்றும் இன்றும் நேரில் சந்தித்து பேசியது. மணிப்பூரின் நிலைமைகளை இக்குழுவினர் உன்னிப்பாக ஆய்வு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து “இந்தியா” கூட்டணி எம்.பி.க்கள் குழு மணிப்பூர் மாநில ஆளுநர் அனுசுயா உய்கேவையும் சந்தித்தனர். இச்சந்திப்பின் போது, மணிப்பூர் நிலைமையை கட்டுப்படுத்த வேண்டும். அப்படி செய்யாவிட்டால் ஒட்டுமொத்த தேசத்துக்கு பேராபத்தாக முடியும் என எச்சரித்தனர்.
மணிப்பூர் ஆளுநருடனான சந்திப்பு தொடர்பாக மூத்த காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறியதாவது: “இந்தியா” கூட்டணியின் 21 எம்.பி.க்களும் ஆளுநரை நேரில் சந்தித்து மனு கொடுத்தோம். எங்களுடனான உரையாடலின் போது ஆளுநரும் தமது வலியையும் வேதனையையும் பகிர்ந்து கொண்டார். 2 நாட்கள் மணிப்பூரில் நாங்கள் பார்த்தவற்றையும் கேட்டறிந்தவற்றையும் ஆளுநரிடம் விவரித்தோம். நாங்கள் சொன்ன நிலவரங்களையும் அவர் ஏற்றுக் கொண்டார். அனைத்து தரப்பும் இணைந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற கருத்தையும் ஆளுநர் முன்வைத்தார்.
மேலும் மணிப்பூர் மாநிலத்துக்கு அனைத்து கட்சிகள் குழு ஒன்றை மத்திய அரசு அனுப்ப நடவடிக்கை எடுத்தாக வேண்டும் எனவும் பரிந்துரைத்தோம். இது தொடர்பாக மத்திய அரசுக்கு அழுத்தம் தருவோம் எனவும் கூறினோம். இவ்வாறு ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்தார்.
மணிப்பூரில் வன்முறைகளில் ஈடுபடும் ஆயுத குழுக்களுக்கு மியான்மர் வழியாக சீனா ஆயுதம் தருகிறது என பரவலாக குற்றம்சாட்டப்படுகிறது. பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி இக்கருத்தை தொடர்ந்து கூறிவந்த நிலையில் முன்னாள் ராணுவ தளபதி நரவனேவும் இதே கருத்தை வெளிப்படுத்தி இருந்தார். தற்போது எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்களும் மணிப்பூர் நிலைமையை கட்டுப்படுத்தாவிட்டால் தேசத்தின் பாதுகாப்புக்கே ஆபத்து என எச்சரித்துள்ளனர்.